தலைமை தேர்தல் ஆணையம், துணை ஜனாதிபதி தேர்தலை வரும் செப்டம்பர் 9ம் தேதி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றதோடு, இன்று (ஆகஸ்ட் 20) தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.
இதற்கிடையில், இண்டி கூட்டணியில் வேட்பாளர் யார் என்பதில் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. நேற்றைய நாள் பல மணி நேரம் நடைபெற்ற ஆலோசனையிலும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. தற்போது திருச்சி சிவா, தமிழக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று நண்பகல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். வேட்பாளர் தேர்வு செய்யும் அதிகாரம் கார்கேவிடம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், இண்டி கூட்டணியில் ஒருமித்த கருத்து இன்னும் உருவாகவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 21 கடைசி நாளாகும். எனவே, இன்று நடைபெறும் கூட்டத்தில் இண்டி கூட்டணியின் வேட்பாளர் பெயர் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் வாய்ப்பு அதிகம் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.