ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில் இந்திய அணி பேட்டிங் துவக்கத்தில் தடுமாறி, வெறும் 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 126 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா களம் இறங்கியுள்ளது.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் T20 தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை இழந்த இந்தியா, தற்போது T20 தொடரில் வெற்றிக்காக போராடி வருகிறது.
மழையால் முதல் T20 போட்டி முடிவின்றி ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங்கைத் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்கம் ஏமாற்றமளித்தது. துணை கேப்டன் ஷுப்மன் கில் 5 ரன்களிலும், விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் 2 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 1 ரன்னிலும், திலக் வர்மா ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர். அக்சர் படேல் 7 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.
இந்நிலையில் ஹர்ஷித் ரானா மற்றும் அபிஷேக் சர்மா சேர்ந்து 6ஆவது விக்கெட்டிற்காக 56 ரன்கள் கூட்டணியை அமைத்து அணிக்கு சிறு நிம்மதியை ஏற்படுத்தினர். அபிஷேக் சர்மா தனியாக 68 ரன்கள் எடுத்தார். ரானா 35 ரன்கள் எடுத்தார்.
ஆனால் பிற வீரர்கள் பெரிய ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல், இந்திய அணி 18.4 ஓவர்களில் 125 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களம் இறங்கியுள்ளது.
 
			















