கிட்னி சர்ச்சையை தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கல்லீரல் விற்பனை நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிபாளையத்தைச் சேர்ந்த 37 வயது பெண் ஒருவர், கடன் நெருக்கடி காரணமாக கிட்னி தானம் வழங்க முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் பரிசோதனையில் அவரது கிட்னி பொருத்தமில்லாததால், புரோக்கர்கள் கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக வழங்கும்படி நிர்பந்தித்துள்ளனர்.
இதனால், வேறு வழியின்றி அவர் கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்ததாகவும், பேரத்தில் கூறிய 8 லட்சம் ரூபாய் வழங்கப்படாமல், வெறும் 4.3 லட்சம் ரூபாயே கிடைத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், சிகிச்சை செய்யும்போது அவரது பித்தப்பையும் அகற்றப்பட்டதால், தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே தவித்து வருகிறார்.
தனது கணவரை பிரிந்து மகன், மகளுடன் வாழும் அந்த பெண்ணின் குடும்ப நிலையும் சீர்குலைந்துள்ளது. 18 வயது மகன் கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வருகிறார். அதேசமயம், 13 வயது மகள் தாயை கவனிக்க வேண்டிய சூழலில் படிப்பைத் தொடர முடியாமல் தவித்து வருகிறார்.
இந்த சம்பவம், ஏழ்மை மற்றும் கடன் சிக்கலில் சிக்கிய அப்பாவிகளை குறிவைத்து உடல் உறுப்புகளை விற்க தூண்டுகின்ற கும்பலின் கொடூரத்தை வெளிச்சம் போட்டுள்ளது. சம்பந்தப்பட்ட புரோக்கர் மற்றும் கும்பலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஏற்கனவே, கிட்னி விற்பனை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது கல்லீரல் விற்பனை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து பெரும் அதிர்வலை கிளப்பியுள்ளது.