உயிர்பலி ஏற்பட்டால் தான் வேலை பார்ப்பேன் என்பது எந்த விதத்தில் நியாயம்..?திருவாரூர் பொதுமக்கள் ஆதங்கம்

ஒவ்வொரு முறை உயிர் பலி ஏற்பட்டால்தான் அந்தந்த துறை அதிகாரிகள் அவரவர் வேலையை செய்வார்களா…? வேலை பார்ப்பதற்கு தானே சம்பளம் தருகிறார்கள். உயிர்பலி ஏற்பட்டால் தான் வேலை பார்ப்பேன் என்பது எந்த விதத்தில் நியாயம்..?திருவாரூர் பொதுமக்கள் ஆதங்கம்

திருவாரூர் நகரின் மையப்பகுதியான புது தெருவில் நாலுகால் மண்டபம் அமைந்துள்ளது. இதற்கு அருகில் உள்ள அரிசி ஆலைக்கு சென்ற டிராக்டர் மோதி, பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பிய நான்காம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்திலேயே நேற்று மாலை உயிரிழந்தார். குறுகலான சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து இன்று அந்தப் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் திருவாரூர் நகராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டனர்.

வழக்கமாக இந்த பகுதி ஆபத்து நிறைந்த பகுதி என்பதால் வேகத்தடை அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் அதனை அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. வேகத்தடை இருந்தால் இந்த பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்திருக்காது. மேலும் ஆக்கிரமிப்பு அகற்றுவதிலும் அதிகாரிகள் முறையாக ஈடுபடவில்லை எனவும் கூறப்படுகிறது.

இது குறித்து இப்பகுதி மக்கள் கூறும் போது….

திருத்துறைப்பூண்டி – சென்னை நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த புதுத்தெரு பகுதியில் எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். மேலும் இந்த பகுதி வளைவு என்பதால் வாகனங்கள் அதி வேகத்தில் சென்று வருகின்றன. எனவே இப்பகுதி மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வேகத்தடை அமைக்க வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் அவர்கள் அதனை கண்டு கொள்ளவில்லை. மேலும் இந்த புதுத்தெரு பகுதியில் மழை நீர் வடிகால் அமைப்பதற்காக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், முழுமையாக ஆக்கிரமிப்பை அகற்றாமல், குறிப்பிட்ட பகுதியில் மட்டும் ஆக்கிரமிப்பு அகற்றுகிறோம் என்ற போர்வையில் மரங்களை வேரோடு அகற்றி விட்டு சாலை விரிவாக்க பணியை செய்துவிட்டு சென்றுவிட்டனர். இதனால் தான் இந்த பகுதியில் சாலை விபத்து ஏற்பட்டது. சாலை விபத்தில் மாணவன் ஒருவன் உயிரிழந்ததை அடுத்து இந்த பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்றி உரிய சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டியது அதிகாரிகளின் கடமை தானே. அதற்காகத்தானே சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் அதை முறையாக செய்யாமல் விட்டு விட்டு ஒரு உயிரை பலிவாங்கி விட்டார்கள். இது இங்கு மட்டுமல்ல எல்லா ஊரிலும், எல்லா நகரங்களிலும், எல்லா கிராமத்திலும் இதே நிலைதான். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு உயிரை காவு வாங்கிய பிறகு தான் அதிகாரிகள் அவர்கள் வேலையை செய்வார்களா..? அப்புறம் எதற்கு அவர்கள் சம்பளம் வாங்குகிறார்கள் என ஆதங்கத்துடன் அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பினர்.

பேட்டி : பாரதி – பகுதி குடியிருப்புவாசி

Exit mobile version