சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் நவகிரக செவ்வாய்ஸ்தலமான வைத்தியநாதர்சுவாமி கோயில் அமைந்துள்ளது.இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில பக்தர்களும் அதிகளவு வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இக்கோயிலின் கிழக்கு கோபுரம் அருகே வைத்தீஸ்வரன்கோயில் நயினார்தோப்பு தெருவை சேர்ந்தவர் செந்தில்(35) இவர் பி.ஏ.பட்டதாரி. இவர் கடந்த 12ஆண்டுகளாக இளநீர் வியாபாரம் செய்துவருகிறார்.கடந்த சில ஆண்டுகளாக வைத்தீஸ்வரன்கோயில் அருகே இளநீர் வியாபாரம் செய்து வரும் செந்தில், மண்ணை மலடாக்கும் நெகிழி ஒழிப்பை முன்னெடுப்பதில் ஆர்வம் காட்டிவருகிறார். தான் செய்யும் தொழிலில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இளநீர் அருந்த பிளாஸ்டிக் ஸ்டிராவிற்கு பதிலாக பப்பாளி இலை தண்டை குழலாக பயன்படுத்திவருகிறார். பிளாஸ்டி ஸ்டிரா மூலம் இளநீர் அருந்துவதால் மக்களுக்கு உடல் உபாதையைதான் ஏற்படுத்தும்.இயற்கை பானம் இளநீர் அருந்த ஏன் ஸ்டிரா தரவேண்டும் என யோசித்து மாற்று சிந்தனையாக பப்பாளி மர இலையில் உள்ள தண்டுகளை சேகரித்து அதனை சுத்தம் செய்து சிறு துண்டுகாக நறுக்கி வைத்து அதனை இளநீர் அருந்தும் நபர்களுக்கு வழங்கிவருகிறார். இது கோயிலுக்கு வரும் பக்தர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, பாராட்டையும் பெற்று வருகிறது. வெளிமாநில பக்தர்கள் இந்த செயலை பாராட்டி அவருடன் செல்பி எடுத்து தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டும் நெகிழி விழிப்புணர்வு ஏற்படுத்துவது தனக்கு கிடைத்த வெற்றியாக கருதுவதாக செந்தில் தெரிவித்தார்


















