கோவை மாநகராட்சியில் 188 திறந்தவெளி கிணறுகள் மழைநீர் சேகரிப்பு மையங்களாக மாற்றம்

தொழில் நகரமான கோவையில் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் தொழிற்சாலைகளின் பெருக்கத்தால், நிலத்தடி நீர்மட்டம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதலபாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது. நகரின் பல்வேறு பகுதிகளில் தங்கு தடையின்றி ஆழ்துளைக் கிணறுகள் (Borewells) அமைக்கப்பட்டு நீர் உறிஞ்சப்படுவதால், எதிர்காலத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதனை உணர்ந்த கோவை மாநகராட்சி நிர்வாகம், பருவமழைக் காலங்களில் வீணாகக் கழிவுநீருடன் கலந்து குளங்களுக்குச் செல்லும் மழைநீரைச் சேமித்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்கில் ஒரு முன்னோடித் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. இதற்காக மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்களில் உள்ள 188 பழைய திறந்தவெளி கிணறுகளைப் புதுப்பித்து, அவற்றை மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளாக மாற்ற 14 கோடியே 96 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட மண்டல வாரியான கணக்கெடுப்பில், தெற்கு மண்டலத்தில் அதிகபட்சமாக 60 கிணறுகளும், கிழக்கு மண்டலத்தில் 42, மேற்கு மண்டலத்தில் 39, வடக்கு மண்டலத்தில் 35 மற்றும் மத்திய மண்டலத்தில் 12 என மொத்தம் 188 கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் பழைய கிணறுகளைச் சுற்றியுள்ள புதர்களை அகற்றி, கிணற்றைத் தூர்வாரிச் சுத்தம் செய்வதோடு, பாதுகாப்பு கருதி அதன் மேல்பகுதியில் உறுதியான இரும்பு கிரில்கள் அமைக்கப்பட உள்ளன. குறிப்பாக, அந்தந்தப் பகுதிகளில் சாலைகளில் வழிந்தோடி வரும் மழைநீர் வடிகால்கள் வழியாக இந்தக் கிணறுகளுக்குள் சென்றடையும் வகையில் நவீனக் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) புனேவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஏற்கனவே கோவை மாநகராட்சி அலுவலகங்கள் மற்றும் முக்கியச் சாலைகளில் ‘ஜெர்மன் தொழில்நுட்பம்’ மூலம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் வெற்றிகரமாக அமைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் திறந்தவெளி கிணறுகள் திட்டம் அடுத்த மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. இது குறித்து மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், “திறந்தவெளி கிணறுகளை மழைநீர் சேகரிப்பு மையங்களாக மாற்றும் திட்டத்திற்கு மாமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், மிக விரைவில் டெண்டர் கோரப்பட்டுப் பணிகள் தொடங்கப்படும்,” எனத் தெரிவித்தார். இத்திட்டம் செயல்பாட்டிற்கு வரும்போது, கோவையின் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறிப்பிடத்தக்க அளவு உயர்வதோடு, கோடைக் காலங்களில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாடும் குறைய வாய்ப்புள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Exit mobile version