தேனி மாவட்டம் போடி அருகே கடந்த 2018-ஆம் ஆண்டு சொத்து தகராறு காரணமாகக் கூலித்தொழிலாளி ரமேஷ் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த மேலும் ஒரு நபரை பழனிசெட்டிபட்டி போலீசார் நேற்று அதிரடியாகக் கைது செய்தனர். போடி குப்பிநாயக்கன்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு திடீரென மாயமானார். இது குறித்து அவரது மனைவி மேகலா அளித்த புகாரின் பேரில் போடி நகர் போலீசார் பல ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்தனர். ஆரம்பத்தில் இது சாதாரண ‘ஆள் மாயம்’ (Missing Case) வழக்காகவே பார்க்கப்பட்டது.
இருப்பினும், அதே காலகட்டத்தில் வீரபாண்டி அருகே உள்ள ஒரு பாழ் கிணற்றில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலத்தை வீரபாண்டி போலீசார் மீட்டிருந்தனர். ரமேஷ் மாயமான வழக்கிற்கும், இந்தச் சடலத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், போடியைச் சேர்ந்த பாண்டி என்பவருக்கும் ரமேஷுக்கும் இடையே தீராத சொத்து தகராறு இருந்தது தெரியவந்தது. இதில் ரமேஷை கடத்திக் கொலை செய்து கிணற்றில் வீசியதை பாண்டி ஒப்புக்கொண்டார். மீட்கப்பட்ட உடல் ரமேஷ் தான் என்பது டி.என்.ஏ பரிசோதனை மற்றும் இதர தடயங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் ஜவஹர் தலைமையிலான தனிப்படையினர் இந்தத் துப்பு துலக்க முடியாத கொலை வழக்கை மீண்டும் கையில் எடுத்து, கடந்த நவம்பர் மாதம் முக்கியக் குற்றவாளிகளான கூடலூர் வழக்கறிஞர் செந்தில்குமார், போடி பாண்டி மற்றும் பழனிசெட்டிபட்டி ராமநாதன் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், இந்தக் கொலையில் தேனி பாரஸ்ட் ரோடு 11-வது தெருவைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (38) என்பவருக்கும் முக்கியப் பங்கு இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. ஏழு ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த சண்முகசுந்தரத்தை நேற்று போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவரிடம் இந்தக் கொலையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பல ஆண்டுகளாக நீடித்து வந்த ஒரு மர்மக் கொலை வழக்கில், குற்றவாளிகள் ஒவ்வொருவராகக் பிடிபட்டு வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

















