தமிழகத்தில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தினமான 1956 டிசம்பர் 27-ஐ நினைவுகூரும் வகையில், மாநிலம் முழுவதும் டிசம்பர் மாதம் ஆட்சிமொழிச் சட்ட வாரமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் இந்த ஆண்டு டிசம்பர் 17 முதல் டிசம்பர் 26 வரை ஒரு வார காலத்திற்குச் சிறப்பு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் இப்பேரணியை நேரில் தொடங்கி வைத்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், நிருவாகத்தில் தமிழை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். குறிப்பாக, அரசுப் பணியாளர்களுக்குக் கணினிப் பயிற்சி, தமிழில் வரைவுகள் மற்றும் குறிப்புகள் எழுதுவதற்கான சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார். மேலும், வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளைத் தமிழில் வைக்க வலியுறுத்தித் தொழிலாளர் துறையுடன் இணைந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன. “அரசு அலுவலகங்கள் மற்றும் கடைகளில் ஆட்சிமொழிச் சட்ட வார விழிப்புணர்வு ஒட்டுவில்லைகள் ஒட்டப்படுவதுடன், அரசாணை நகல்களும் விநியோகிக்கப்படும்” என ஆட்சியர் உறுதியளித்தார்.
முன்னதாக, தமிழ் சார்ந்த கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய இப்பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பொதுமக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இந்தப் பேரணியில் திருநெல்வேலி மண்டல இணை இயக்குநர் பெ. இளங்கோ, உதவி இயக்குநர் கனகலெட்சுமி மற்றும் தமிழ்செம்மல் விருதாளர் முனைவர் பா. வேலம்மாள் உள்ளிட்ட தமிழறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர். பள்ளி – கல்லூரி மாணவ மாணவியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் திரளாகப் பங்கேற்ற இந்த நிகழ்வு, எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற முழக்கத்துடன் தென்காசி மண்ணில் தமிழ் உணர்வை மீளெழுச்சி பெறச் செய்துள்ளது.
