தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான பருவம் தொடங்கியுள்ள நிலையில், சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ள கீழக்கோட்டை கிராமம் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இலங்கையின் ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சரும், இந்திய வம்சாவளித் தமிழருமான செந்தில் தொண்டைமான், தனது சொந்தக் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்குப் பயிற்சி அளிப்பதற்காகவே பிரத்யேகமாக ‘வாடிவாசல்’ போன்ற மாதிரி அமைப்பை உருவாக்கி, காளைகளுக்குத் தீவிரப் பயிற்சி அளித்து வருகிறார். இது தொடர்பான புகைப்படங்களும் காணொளிகளும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
சிவகங்கையைத் தனது பூர்வீகமாகக் கொண்ட செந்தில் தொண்டைமான், அரசியலுக்கு அப்பால் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீது மிகுந்த பற்று கொண்டவர். இதற்காகவே கீழக்கோட்டையில் உள்ள அவரது பண்ணை வீட்டில் காரி, மரை, செவலை என 10-க்கும் மேற்பட்ட உயர்வகைக் காளைகளைப் பராமரித்து வருகிறார். ஆண்டுதோறும் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் இவரது காளைகள் தவறாமல் களம் இறங்கி, மாடுபிடி வீரர்களுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிப் பல தங்கக் காசுகளையும், விலையுயர்ந்த பரிசுகளையும் குவித்து வருகின்றன.
தற்போது சீசன் தொடங்கியுள்ளதால், காளைகள் வாடிவாசலில் இருந்து வெளியேறும்போது மிரளாமல் இருக்கவும், வீரர்களிடம் பிடிபடாமல் சீறிப்பாயவும் ஏதுவாக, மாதிரி வாடிவாசல் அமைத்துத் தினசரி உடற்பயிற்சி மற்றும் மண் குத்துதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இது குறித்து அவரது தரப்பில் கூறுகையில், “ஜல்லிக்கட்டு என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது நம் இனத்தின் அடையாளம். காளைகளை ஒரு குழந்தையைப் போலப் பராமரித்து, அவற்றின் வீரத்தைப் போற்றும் விதமாகவே இந்தப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓர் அந்நிய நாட்டின் முன்னாள் முதலமைச்சர், தனது மண்ணின் கலாச்சாரத்தைப் போற்றும் விதமாகத் தமிழகத்தில் தங்கி நேரிடையாகக் காளைகளைப் பயிற்சியில் ஈடுபடுத்துவது ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

















