மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 39,640 ஹெக்டேர் குறுவை நெல் பயிரிடப்பட்டிருந்த நிலையில், 39,549 ஹெக்டேர் அறுவடை முடிக்கப்பட்டு, 91 ஹெக்டேர் பரப்பளவில் மட்டுமே அறுவடை எஞ்சியுள்ளது. மாவட்டம் முழுவதும் 144 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 1,21,681மெட்ரிக் டென் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, அதில் 1,10,761 மெட்ரிக் டன் நெல் பாதுகாப்பாக நகர்வு செய்யப்பட்டுள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருப்பில் உள்ள 10,920 மெட்ரிக் டன் நெல் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டு, நகர்வு செய்யப்பட்டு வருகிறது.
தினசரி 150 லாரிகள் மூலம் சராசரியாக 3000 மெட்ரிக் டன் நெல் இயக்கம் செய்யப்படுகிறது. மேலும் தினசரி ஒன்று அல்லது இரண்டு ரயில்கள் மூலம் சராசரியாக 2000 முதல் 4000 மெட்ரிக் டன் வரையான நெல் மூட்டைகள் வெளி மாவட்டங்களுக்கு அரவைக்காக நகர்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த வாரத்தில் பெய்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் 22 சதவீதம் வரை உள்ளதாகவும், எனவே, ஈரப்பதம் தளர்வு அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து, ஈரப்பதம் தளர்வு குறித்த தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மத்தியக்குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மத்தியக்குழுவினர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம் தாலுக்கா கந்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இந்திய தானிய சேமிப்பு மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குநர் பி.கே.சிங்க் தலைமையிலான மத்திய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குநர் ஆ.அண்ணாதுரை, மயிலாடுதுறை எம்பி சுதா , மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் உட்பட பலர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து மயிலாடுதுறை தாலுக்காவில் கிழாய், சீர்காழி தாலுக்காவில் பழையபாளையம், தரங்கம்பாடி தாலுக்காவில் ஆக்கூர் ஆகிய கிராமங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இந்த ஆய்வு குறித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் கூறுகையில் மத்திய குழுவினர் ஈரப்பதத்தை ஆய்வு செய்துள்ளனர்.
