தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே காற்றில் கலைந்து விழுந்த கதண்டு கூட்டிலிருந்து வெளியேறிய விஷ வண்டுகள், குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பொதுமக்களை விரட்டி விரட்டி கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த பெண்கள், முதியவர்கள் என மொத்தம் 11 பேர் பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேராவூரணி ஒன்றியம் பழையநகரம் ஊராட்சிக்கு உட்பட்ட சீவன்குறிச்சி கிராமத்தில், சாலையோரம் இருந்த ஒரு பெரிய மாமரத்தில் விஷ வண்டான கதண்டு (Hornets) மிகப்பெரிய கூடு கட்டியிருந்தது. நேற்று காலை அந்தப் பகுதியில் பலத்த காற்று வீசியுள்ளது. காற்றின் வேகத்தைத் தாங்க முடியாமல் மாமரத்தில் இருந்த கதண்டு கூடு திடீரென உடைந்து கீழே விழுந்தது. இதனால் கலைந்து போன ஆயிரக்கணக்கான விஷ வண்டுகள் ஆக்ரோஷத்துடன் ஊருக்குள் புகுந்தன.
கூடு விழுந்த வேகத்தில் சீவன்குறிச்சி தெருக்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் பறந்த வண்டுகள், கண்ணில் பட்டவர்களையெல்லாம் துரத்திச் சென்று கடித்தன. சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள், வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்த முதியவர்கள் எனப் பலரையும் வண்டுகள் விட்டு வைக்கவில்லை. வண்டுகளின் தாக்குதலால் அலறியடித்து ஓடிய மக்கள், வீடுகளுக்குள் கதவைச் சாத்திக்கொண்டு தஞ்சம் புகுந்தனர்.
இந்தத் தாக்குதலில் தாமோதரன் (50), ராமதாஸ் (65), நீலகண்டன் (65), கணேசன் (60), மஞ்சுளா (55), ஆனந்தன் (60), பாலகிருஷ்ணன் (70), கலைச்செல்வி (70), செல்வி (50), ரமேஷ் (55), மற்றும் மணிகண்டன் (35) ஆகிய 11 பேர் உடல் முழுவதும் பலத்த காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், “கதண்டு கடித்தால் உடலில் கடும் நஞ்சு ஏறும் என்பதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வாமை எதிர்ப்பு ஊசிகளும் மருந்துகளும் வழங்கப்பட்டுள்ளன. தற்போது அனைவரும் அபாயக் கட்டத்தைத் தாண்டி கண்காணிப்பில் உள்ளனர்” எனத் தெரிவித்தனர். குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் இது போன்ற விஷ வண்டுகள் கூடு கட்டியிருப்பதை வனத்துறை அல்லது தீயணைப்புத் துறையினர் முறையாக ஆய்வு செய்து அகற்ற வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தச் சம்பவத்தால் சீவன்குறிச்சி கிராமமே நேற்று அச்சத்தில் உறைந்தது.

















