நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே செறியேறி – கூலால் பகுதியைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பல ஆண்டுகளாகச் சீரமைக்கப்படாத சாலையைக் கண்டித்தும், அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள், சிறு விவசாயிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள், சாலை வசதி இல்லாத காரணத்தால் அன்றாடத் தேவைகளுக்கும், மருத்துவச் சிகிச்சைகளுக்கும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, 5 கிலோமீட்டர் தூரம் வரை மக்கள் நடந்து செல்ல வேண்டிய நிலையும், அவசரத் தேவைகளுக்கு வாடகை வாகனங்கள் கிடைக்காத சூழலும் நிலவுகிறது.
தற்போது இந்தப் பகுதியில் உள்ள சாலை முழுமையாகப் பெயர்ந்து குண்டும் குழியுமாகக் காட்சியளிப்பதால், ஆட்டோ மற்றும் ஜீப் ஓட்டுநர்கள் இப்பகுதிக்கு வர மறுப்பதாக மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். ஒருவேளை அவசரத்திற்காக வாகனங்கள் வந்தாலும், வழக்கத்தை விடக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் வறிய நிலையில் உள்ள பழங்குடியின மக்கள் பெரும் பொருளாதாரச் சுமைக்கு ஆளாகின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக, உயிருக்குப் போராடும் நேரங்களில் ‘108’ ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூடக் கிராமத்திற்குள் வர முடியாத அவலநிலை நீடிக்கிறது. இதனால் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியவர்கள் உரிய நேரத்தில் மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் கரும்பி கூறுகையில், “நாங்கள் பல தலைமுறைகளாக இங்கு வசித்து வருகிறோம். சாலை வசதி இல்லாதது எங்கள் வாழ்வாதாரத்தையே முடக்கியுள்ளது. நோயாளிகளைத் தூக்கிக் கொண்டு பல கிலோமீட்டர் நடக்கும் துயரம் தொடர்கிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது எங்களை வஞ்சிக்கும் செயலாக உள்ளது,” என்று குமுறினார். கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி சாலைச் சீரமைப்பு குறித்து அதிகாரிகளிடம் மனு அளித்தும், இதுவரை எந்தவொரு கள ஆய்வோ அல்லது பேச்சுவார்த்தையோ நடத்தப்படவில்லை என்று கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதிகாரிகளின் இந்த மெத்தனப் போக்கினால் ஆத்திரமடைந்த கிராமத்தினர், தங்கள் பகுதியில் உள்ள 150 வீடுகளிலும் கருப்புக் கொடிகளைக் கட்டியுள்ளனர். மேலும், “தேர்தல் நேரத்தில் ஓட்டு கேட்டு எந்தவொரு அரசியல் கட்சியினரும் எங்கள் கிராமத்திற்குள் வரக்கூடாது” என்ற வாசகங்கள் அடங்கிய கண்டனப் பேனர்களையும் ஊர் எல்லையில் வைத்துள்ளனர். கிராம மையப்பகுதியில் திரண்ட பழங்குடியின மக்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து கருப்புக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடிப்படைத் தேவையை நிறைவேற்றாத பட்சத்தில் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாக மக்கள் எச்சரித்துள்ளனர்.

















