திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேற்கு மண்டல மகளிரணி மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுவதற்காகத் தமிழக முதல்வர் இன்று கோவை வருகை தருகிறார். முதல்வரை வரவேற்கும் விதமாக, கோவை விமான நிலையத்தில் இருந்து அவிநாசி சாலை வழியாகப் பல்லடம் செல்லும் வழிநெடுகிலும் சுமார் 20 கிலோமீட்டர் தூரத்திற்கும் மேலாகப் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சாலையின் இருபுறமும் 15 அடிக்கு ஒரு கொடிக்கம்பம் வீதம் ஆயிரக்கணக்கான கம்பங்கள் நடப்பட்டுள்ளன. இதற்காக நவீன ‘டிரில்’ இயந்திரங்கள் மூலம் தார் சாலை மற்றும் நடைபாதைகளில் துளையிடப்பட்டு, இரும்புக்குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. ஆளுங்கட்சியின் இந்த அதிரடி ஏற்பாடு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தாலும், இது தமிழக அரசின் அண்மைக்கால வழிகாட்டு நெறிமுறைகளை அப்பட்டமாக மீறும் செயலாக உள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தமிழக ஊரக வளர்ச்சித் துறை சமீபத்தில் காவல்துறை மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தற்காலிகக் கொடிக்கம்பங்கள் அமைப்பது குறித்து மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, தற்காலிகக் கொடிக்கம்பங்கள் அமைக்க விரும்புவோர் நிகழ்ச்சிக்கு ஏழு நாட்களுக்கு முன்பே கோட்ட அளவிலான துணைக் குழுவிடம் அனுமதி பெற வேண்டும். குறிப்பாக, சாலைக் கட்டமைப்புகளான மைய நடைபாதை (Medians), வடிகால்கள் மற்றும் பாலங்கள் மீது எக்காரணம் கொண்டும் துளையிடவோ, கம்பங்கள் நடவோ அனுமதி அளிக்கக்கூடாது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மீறி அமைக்கப்பட்டு விபத்துக்கள் நேர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தடை செய்யப்பட்ட இடங்களில் கம்பங்கள் வைத்தால் போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்த அரசாணை கூறுகிறது.
மேலும், தற்காலிகக் கொடிக்கம்பங்களுக்கு நிகழ்ச்சிக்கு முந்தைய நாள், நிகழ்ச்சி நடைபெறும் நாள் மற்றும் அதற்கு அடுத்த நாள் என மொத்தம் மூன்று நாட்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், இன்று (டிசம்பர் 29) நடைபெறும் நிகழ்ச்சிக்கு, கடந்த 26-ம் தேதியே கொடிக்கம்பங்கள் நடப்பட்டு, விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. “அரசு இயந்திரம் வகுத்த விதிகளையே ஆளுங்கட்சியினர் மீறுவது முறையற்றது” எனச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள், அரசியல் மாநாடுகளின் போது பெயரளவிற்குக்கூடப் பின்பற்றப்படாதது விவாதப் பொருளாக மாறியுள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் செலவில் போடப்பட்ட சாலைகளில் துளையிடப்படுவது சாலைப் பராமரிப்பையும் பாதிக்கும் எனப் புகார்கள் எழுந்துள்ளன.
















