கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத் தலைவரின் கட்டுப்பாட்டில் உள்ள 36-வது வார்டுக்கு உட்பட்ட நியூ தில்லை நகர் பகுதியில், கடந்த சில தினங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகள் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. இங்குள்ள 14 வீதிகளிலும் முறையான தரக்கட்டுப்பாடுகள் இன்றி, இரவோடு இரவாக அவசர கதியில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பழைய சாலையை முறையாகப் பெயர்த்தெடுத்துவிட்டு (Milling) புதிய சாலை அமைக்க வேண்டும் என்ற அடிப்படைப் பொறியியல் விதியைப் பின்பற்றாமல், பழைய சாலையின் மேலேயே புதிய தார் கலவை கொட்டப்படுகிறது. ஒரு வீதியின் சாலைப் பணியை வெறும் அரை மணி நேரத்திற்குள் ஒப்பந்ததாரர்கள் முடித்து விடுவது, சாலையின் ஆயுட்காலம் குறித்த அச்சத்தை அப்பகுதி மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
தொழில்நுட்ப ரீதியாகச் சாலை அமைக்கும்போது பல அடுக்குகளாக (Layers) தார் கலவை பரப்பப்பட வேண்டும். ஆனால், நியூ தில்லை நகரில் வெறும் 30 மி.மீ. தடிமனுக்கு ஒரே ஒரு அடுக்கு மட்டுமே தார் கலவை ‘போர்வை’ போர்த்தியது போலத் தெளிக்கப்படுகிறது. இதனால், வீடுகளில் இருந்து வாகனங்களை வெளியே எடுக்கும்போது, டயர்களில் தார் ஒட்டிக்கொண்டு சாலை பெயர்ந்து வரும் அவலம் நேரிடுகிறது. இதுமட்டுமன்றி, சாலையில் உள்ள பாதாளச் சாக்கடை குழாய் மூடிகள் (Manholes) தார் ஊற்றப்பட்டு அப்படியே மறைக்கப்பட்டுள்ளன. இதனால் எதிர்காலத்தில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டால், சாலையைத் தோண்ட வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தரமற்ற தார் கலவையால் வாகனங்கள் சறுக்கி விபத்துக்கள் ஏற்படுவதாகவும், லேசான மழை பெய்தாலே இந்தச் சாலைகள் முழுமையாகக் கரைந்துவிடும் நிலையில் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “மெயின் ரோடுகளில் இரண்டு அடுக்குகளும், குறுக்கு வீதிகளில் ஒரு அடுக்கும் மட்டுமே போடப்படும். மூன்றாம் தரப்பு ஏஜென்சி மூலம் ஆய்வு செய்த பின்னரே ஒப்பந்ததாரருக்குப் பில் தொகை வழங்கப்படும்” என மழுப்பலான விளக்கமளிக்கின்றனர். இருப்பினும், சாலைப் பணிகள் நடைபெறும் போது அங்கேயே இருந்து கண்காணிக்க வேண்டிய உதவிப் பொறியாளர் முதல் தலைமைப் பொறியாளர் வரையிலான அதிகாரிகள், தங்கள் கடமையிலிருந்து தவறியதே ஒப்பந்ததாரர்களின் இத்தகைய தன்னிச்சையான போக்கிற்கு முக்கியக் காரணமாகும். மக்களின் வரிப்பணத்தில் போடப்படும் சாலைகள், குறைந்தபட்சம் சில ஆண்டுகளாவது நிலைக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டுத் தரமான சாலைகளை அமைக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

















