திருநெல்வேலி பாளையங்கோட்டை தியாகராஜநகர் பிரதான நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த சித்தி விநாயகர் கோயில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் அதிரடி உத்தரவைத் தொடர்ந்து நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டது. இடிக்க எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேரைப் போலீசார் கைது செய்ததால் அந்தப் பகுதியில் சில மணி நேரம் பெரும் பதற்றமும் பரபரப்பும் நிலவியது.
தியாகராஜநகர் நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து இந்தச் சித்தி விநாயகர் கோயில் கட்டப்பட்டிருந்தது. இக்கோயிலைப் பக்த சேவா சங்க நிர்வாகிகள் நிர்வகித்து வந்தனர். பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாகக் கோயில் கட்டிடம் இருப்பதாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நிலத்தை முறையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்பை உறுதி செய்தனர்.
ஆக்கிரமிப்புகளைத் தாங்களாகவே அகற்றிக் கொள்ளக் கோரி கோயில் நிர்வாகிகளுக்கு கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி வரை மூன்று முறை முறைப்படி நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருப்பினும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால், ஜனவரி 9-ஆம் தேதி (நேற்று) பகல் 11 மணிக்கு இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனை எதிர்த்து நேற்று முன்தினம் கோயில் நிர்வாகத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு முயன்ற நிலையில், அவர்கள் போலீசாரால் அப்புறப்படுத்தப்பட்டனர்.
நேற்று அறிவித்தபடி, பாளை தாசில்தார் இசைவாணி, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சண்முகநாதன் மற்றும் மாநகரக் காவல் துணை ஆணையர் கண்ணதாசன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார், தீயணைப்புத் துறையினர் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் ஜே.சி.பி இயந்திரங்களுடன் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது, கோயிலை இடிக்க எதிர்ப்புத் தெரிவித்துச் சிலர் கோயில் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களைக் கலைந்து செல்ல அறிவுறுத்தியும் கேட்காததால், போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
அதன்பின், பிற்பகல் 1.30 மணியளவில் பொக்லைன் இயந்திரம் மூலம் கோயில் முகப்பு மற்றும் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது. பிரதானக் கட்டிடத்தை இடிக்க அதிகாரிகள் முயன்றபோது, அங்கு மீண்டும் நிர்வாகிகளுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில், விநாயகர் சிலையைத் தாங்களே முறைப்படி அகற்றி மாற்று இடத்திற்கு மாற்றிக்கொள்வதாக நிர்வாகிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதைப் பரிசீலித்த அதிகாரிகள், சிலையகற்ற அவகாசம் அளித்துவிட்டு மாலையில் திரும்பினர். மீதமுள்ள ஆக்கிரமிப்புப் பகுதிகள் இன்று (ஜனவரி 10) இரண்டாவது நாளாகத் தொடர்ந்து அகற்றப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இடிப்புப் பணியின் போது அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.

















