நாமக்கல் மாவட்டம் முழுவதும் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யவும், ஒலி மாசுவைக் கட்டுப்படுத்தவும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். விதிகளுக்குப் புறம்பாகப் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் ‘ஏர்-ஹாரன்களை’ (Air Horns) அகற்றிய அதிகாரிகள், விதிமீறலில் ஈடுபட்ட வாகன உரிமையாளர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சாலைகளில் செல்லும் வாகனங்கள், குறிப்பாகப் பேருந்துகள் பயன்படுத்தும் அதிவேக ஏர்-ஹாரன்களால் ஏற்படும் பெரும் சத்தம், சாலையில் செல்லும் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளை நிலைதடுமாறச் செய்கிறது. திடீரெனப் பின்னால் இருந்து ஒலிக்கப்படும் இந்த அலறல் சத்தத்தால் ஏற்படும் அதிர்ச்சியில், முதியவர்கள் மற்றும் இதய நோயாளிகள் பாதிக்கப்படுவதோடு, வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்துகளில் சிக்கும் அபாயமும் நிலவி வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, பொது இடங்களில் அதிக டெசிபல் கொண்ட ஏர்-ஹாரன்களைப் பயன்படுத்த அரசு ஏற்கனவே தடை விதித்துள்ளது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி அவர்களின் உத்தரவின் பேரில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் முருகேசன் மற்றும் பதுமைநாதன் ஆகியோரது நேரடி மேற்பார்வையில் இந்தச் சோதனை முடுக்கிவிடப்பட்டது. நாமக்கல் நகருக்குள் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், பிரபாகரன் மற்றும் செந்தில் ஆகியோர் அடங்கிய குழுவினர் பேருந்து நிலையம் மற்றும் முக்கியச் சாலைச் சந்திப்புகளில் திடீர் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, விதிமுறைகளை மீறி அதிக ஒலி எழுப்பும் வகையில் ஏர்-ஹாரன்கள் பொருத்தப்பட்டிருந்த 20 பேருந்துகளைக் கண்டறிந்து, அவற்றிலிருந்த ஹாரன்களை உடனடியாகப் பறிமுதல் செய்தனர்.
இதேபோல், பரமத்தி வேலூர் பேருந்து நிலையப் பகுதியில் மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஷாஜகான் தலைமையிலான குழுவினர் தீவிரச் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு நடத்தப்பட்ட ஆய்வில், 10 பேருந்துகளில் இருந்து விதிமீறிய ஹாரன்கள் அகற்றப்பட்டன. நேற்றைய ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 30 பேருந்துகளில் இருந்து ஏர்-ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடும் பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கைக்கு வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

















