சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மு.சூரக்குடியில், பிரசித்தி பெற்ற சிறை மீட்ட ஐயனார் மற்றும் செகுட்டு ஐயனார் கோயில் மார்கழி மாத பூஜையை முன்னிட்டு நடைபெற்ற இளவட்ட மஞ்சுவிரட்டு விழாவில், காளைகள் முட்டியதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இப்பகுதியில் ஆண்டுதோறும் மார்கழி மாதக் கடைசி வெள்ளிக்கிழமை அன்று இளவட்ட மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது பல தலைமுறைகளாகத் தொடரும் ஒரு வீர மரபாகும். அந்த வகையில் நேற்றும் வீரமும், ஆன்மீகமும் கலந்த இந்தத் திருவிழா ஊர் மக்கள் முன்னிலையில் கோலாகலமாகத் தொடங்கியது.
மஞ்சுவிரட்டுத் தொடங்குவதற்கு முன்னதாக, ஊர் தொழுவத்திற்கு கிராமத்தின் சார்பில் மேளதாளங்கள் முழங்கச் சீர்வரிசையாகத் துணிகள் கொண்டு வரப்பட்டன. பின்னர், கோயில் காளைகள் உட்படப் போட்டியில் பங்கேற்க வந்திருந்த அனைத்துக் காளைகளுக்கும் வேட்டி மற்றும் துண்டுகள் அணிவிக்கப்பட்டுச் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வாடிவாசல் மற்றும் தொழுவத்திலிருந்து முதலாவதாகக் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதன் பின் வரிசையாகத் தொழு மாடுகளும், வயல்வெளிகளில் கட்டப்பட்டிருந்த கட்டுமாடுகளும் அவிழ்த்து விடப்பட்டன.
சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் மதுரை மாவட்டங்களிலிருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியபோது, அவற்றைத் திமில் பிடித்து அடக்க இளைஞர்கள் போட்டி போட்டனர். காளைகளின் சீற்றத்தில் சிக்கி மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் என 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மு.சூரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயமடைந்த சிலர் மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மஞ்சுவிரட்டு நடைபெற்ற மைதானத்தைச் சுற்றியுள்ள மரங்கள் மற்றும் கட்டடங்களின் மீது ஏறி நின்றபடி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆரவாரத்துடன் போட்டியைக் கண்டு ரசித்தனர். அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கச் சதுர்வேதமங்கலம் போலீசார் மைதானம் முழுவதும் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இந்த இளவட்ட மஞ்சுவிரட்டு, கிராமிய மணம் மாறாத வகையில் சிறப்பாக அமைந்ததாகப் பெரியவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.














