கொடைக்கானலில் மான் குட்டியைத் தனது கன்று என நினைத்து வருடிய பசு

இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானலில், வனப்பகுதியை விட்டு வெளியேறிய மான் குட்டி ஒன்றை, பசு மாடு ஒன்று தனது கன்று என நினைத்து அன்போடு வருடிக்கொடுத்த காட்சி காண்போரை வியப்படையச் செய்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் சுமார் 60 சதவீதம் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இங்கு காட்டெருமை, மான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில், பெருமாள்மலை அருகே உள்ள வனப்பகுதியிலிருந்து குட்டி மான் ஒன்று வழிதவறிச் சாலையோரப் புதர்களுக்குள் தஞ்சமடைந்தது.

அப்போது அந்தப் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு ஒன்று, புதரில் பதுங்கியிருந்த அந்த மான் குட்டியைக் கண்டது. அந்த மான் குட்டியைத் தனது கன்று என நினைத்த அந்தப் பசு, தாய்மை உணர்வோடு தனது நாவால் அந்த மான் குட்டியை மென்மையாக வருடிக்கொடுத்தது. பொதுவாகக் காட்டு விலங்குகளைக் கண்டால் மற்ற விலங்குகள் விலகிச் செல்லும் நிலையில், இந்தப் பசு காட்டிய அன்பு அனைவரையும் நெகிழ வைத்தது. பசுவின் அரவணைப்பைச் சிறிது நேரம் அமைதியாக ஏற்றுக்கொண்ட மான் குட்டி, பின்னர் அது தனது தாய் இல்லை என்பதை உணர்ந்து அங்கிருந்து மெதுவாகப் பின்வாங்கி அடர்ந்த வனப்பகுதிக்குள் மறைந்தது.

இந்த அபூர்வமான காட்சியைக் கண்டு வியந்த பயணி ஒருவர், தனது செல்போனில் அதனைப் படம்பிடித்துச் சமூக வலைதளங்களில் பதிவேற்றினார். “விலங்குகளுக்கு இடையே இருக்கும் இந்தத் தூய்மையான அன்பு மனிதர்களுக்கு ஒரு பாடம்” எனப் பலரும் இந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

Exit mobile version