தமிழகத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலம் வடகிழக்கு பருவமழை காலமாகும். சம்பா சாகுபடிக்கும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி கோடைக்கால நீர் தேவையைப் பூர்த்தி செய்யவும் இந்த மழையே முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது. ஆனால், இந்த ஆண்டு கரூர் மாவட்டத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு ஆகிய இரு பருவமழைகளும் எதிர்பார்த்த அளவு பெய்யாமல் ஏமாற்றம் அளித்துள்ளன. மழையின்றி வறண்ட வானிலை நிலவி வரும் சூழலில், தற்போது வழக்கத்திற்கு மாறாக அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவின் தாக்கம் நாளுக்கு நாள் அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது.
பொதுவாக வடகிழக்கு பருவமழை காலம் முழுமையாக நிறைவடைந்த பிறகே பனிப்பொழிவு தொடங்குவது வழக்கம். ஆனால், நடப்பு ஆண்டில் மழை பெய்ய வேண்டிய சீசனிலேயே கடும் பனிப்பொழிவு நிலவுவது இயற்கை ஆர்வலர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை 4:00 மணி முதல் காலை 7:00 மணி வரை மாவட்டத்தின் பல இடங்களில் வெள்ளைப் போர்வை போர்த்தியது போல அடர்ந்த பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் பள்ளிச் செல்லும் மாணவ, மாணவியர், வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் மற்றும் முதியவர்கள் குளிரைத் தாங்க முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாகக் குழந்தைகளிடையே சளி மற்றும் காய்ச்சல் போன்ற உடல்நலப் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
இந்தக் கடும் பனிமூட்டம் போக்குவரத்தையும் வெகுவாகப் பாதித்துள்ளது. கரூர் – திருச்சி, கரூர் – திண்டுக்கல் மற்றும் மதுரை போன்ற முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் கூடத் தெரியாத அளவிற்குப் பனி மூடி இருப்பதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை (Headlights) எரியவிட்டபடி மிக மெதுவாகச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நெடுஞ்சாலைகளில் பயண நேரம் அதிகரிப்பதோடு, விபத்து அபாயமும் அதிகரித்துள்ளது. பருவமழை பொய்த்துவிட்ட வேதனையில் இருக்கும் விவசாயிகளுக்கு, இந்த அதிகப்படியான பனிப்பொழிவு பயிர்களின் விளைச்சலைப் பாதிக்குமோ என்ற கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

















