தமிழக அரசு பொதுமக்களின் உடல் நலத்தைப் பாதுகாப்பதற்கும், உயர்தர மருத்துவச் சிகிச்சைகள் கடைக்கோடி மனிதனுக்கும் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும் “நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற முன்னோடித் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மீ.தங்கவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமில், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் மற்றும் ஆன்லைன் பதிவு முறைகள் குறித்து அவர் விரிவாகக் கேட்டறிந்தார்.
இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமாக, ஒரே கூரையின் கீழ் 17 வகையான சிறப்பு மருத்துவச் சிகிச்சைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. இதில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவம் மட்டுமல்லாது, இதயம், நரம்பியல், நுரையீரல், நீரிழிவு, தோல், கண், காது-மூக்கு-தொண்டை, மனநலம், இயன்முறை மருத்துவம் மற்றும் சித்த மருத்துவம் போன்ற உயர்தர சிகிச்சைகள் சிறப்பு மருத்துவ நிபுணர்களால் அளிக்கப்படுகின்றன. மேலும், பரிசோதனைகளின் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு உடனடியாக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாளச் சான்றிதழ்கள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், “இம்முகாம்களில் மேற்கொள்ளப்படும் அனைத்துப் பரிசோதனைகளும் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு முறைப்படுத்தப்படுகின்றன. குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சிக் குன்றிய குழந்தைகள், நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோயாளிகள், இதய நோயாளிகள் மற்றும் படுக்கையுற்ற முதியவர்களை இலக்காகக் கொண்டு இந்த முகாம்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கரூர் மாவட்டத்தில் கடந்த 02.08.2025 முதல் 08.01.2026 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் 11,692 ஆண்கள் மற்றும் 19,663 பெண்கள் என மொத்தம் 31,497 பேர் இத்திட்டத்தின் மூலம் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டு பயனடைந்துள்ளனர்” எனப் புள்ளிவிவரங்களுடன் தெரிவித்தார்.
சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மரு.சுப்பிரமணியன், கரூர் வட்டாட்சியர் மோகன்ராஜ் மற்றும் மருத்துவக் குழுவினர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆய்வின் போது, முகாமிற்கு வந்திருந்த பொதுமக்களிடம் சிகிச்சையின் தரம் குறித்து ஆட்சியர் உரையாடினார். அரசு மருத்துவமனைகளுக்குச் செல்ல முடியாத சூழலில் இருப்பவர்களுக்கு, அவர்களது இருப்பிடத்திற்கு அருகிலேயே இத்தகைய நவீன சிகிச்சைகள் கிடைப்பது மாவட்ட மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிகழ்வில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

















