தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில் இத்திட்டம் இன்று போர்க்கால அடிப்படையில் தொடங்கி வைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை பேரூராட்சி மற்றும் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சித்தரேவு ஊராட்சி ஆகிய இடங்களில் உள்ள நியாயவிலைக் கடைகளில் நடைபெற்ற சிறப்பான நிகழ்வுகளில், தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி அவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்குப் பொங்கல் பரிசுகளை வழங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் செ.சரவணன் அவர்கள் முன்னிலையில் இந்த விநியோகப் பணிகள் நடைபெற்றன.
இத்திட்டத்தின் கீழ், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, பொங்கலிட ஒரு முழு நீளக் கரும்பு ஆகியவற்றுடன் 3,000 ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் அரசின் விலையில்லா வேட்டி, சேலைகள் அடங்கிய முழுமையான பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. அமைச்சரிடமிருந்து இந்தப் பொங்கல் சீர்வரிசையைப் பெற்றுக்கொண்ட அப்பகுதிப் பெண்கள், “இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை தங்களுக்கு மிகுந்த மனநிறைவைத் தருவதாக” நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் பொதுமக்களிடையே உரையாற்றிய அமைச்சர் இ.பெரியசாமி, “பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய மக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு, ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற திராவிட மாடல் கோட்பாட்டின் அடிப்படையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு குடும்பமும் மகிழ்ச்சியுடன் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்பதே முதலமைச்சரின் எண்ணம். ஏழை மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவதில் இந்த அரசு எப்போதும் முன்னுரிமை அளிக்கும்,” எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி, கூட்டுறவுத்துறை இணைப் பதிவாளர் ஸ்ரீ ராகவ் பாலாஜி, சித்தையன்கோட்டை பேரூராட்சி தலைவர் போதும்பொன்னுமுரளி, துணைத்தலைவர் ஜாகிர் உசேன், செயல் அலுவலர் ஜெயமாலு, ஆத்தூர் வட்டாட்சியர் திருமுத்து முருகன் உள்ளிட்ட வருவாய்த்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் திரளாகக் கலந்துகொண்டனர். திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான குடும்ப அட்டைதாரர்கள் இந்தத் திட்டத்தினால் பயனடைந்து வரும் நிலையில், முறையான வரிசைப்படி எவ்வித சிரமமுமின்றி அனைவருக்கும் பரிசுத் தொகுப்பு கிடைப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
