தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஸ்டேட் பாங்க் மெயின் ரோட்டில் வசிக்கும் மருத்துவர் எச்.சந்திரசேகர் – யசோதா தம்பதியினர், நகர்ப்புறச் சூழலிலும் இயற்கையோடு இணைந்து வாழ முடியும் என்பதைச் செயலில் நிரூபித்துக் காட்டியுள்ளனர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்களது வீட்டைச் சுற்றியுள்ள 15 சென்ட் நிலப்பரப்பை, ஆக்சிஜன் தரும் மரங்கள், மூலிகைகள் மற்றும் அரிய வகை மலர்கள் நிறைந்த ஒரு பசுமைப் பூங்காவாக மாற்றியுள்ளனர். விவசாயக் குடும்பப் பின்னணியைக் கொண்ட இவர்கள், சுற்றுலாவிற்காகக் கேரளா, ஏற்காடு, மங்களூரு போன்ற இடங்களுக்குச் செல்லும் போதெல்லாம், அங்கிருந்து அரிய வகைச் செடிகளின் நாற்றுகளைச் சேகரித்து வந்து நடுவதைத் தங்களது வழக்கமாகக் கொண்டுள்ளனர். பெரியகுளம் தோட்டக்கலைத் துறை கண்காட்சிகளில் இருந்தும் பல வித்தியாசமான செடிகளை வாங்கி வந்து பராமரித்து வருகின்றனர்.
இந்தத் தோட்டத்தில் நந்தியா வட்டம், செண்பகம், பாரிஜாதம், மனோரஞ்சிதம் போன்ற வாசனை மிகுந்த மலர்களுடன், அரிய வகை அந்தோரியம், ரங்கூன் கீரிப்பர், அலமண்டா மற்றும் காகிதப்பூக்கள் எனப் பல வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. பழ வகைகளில் சப்போட்டா, கொய்யா, மாதுளை, அன்னாசி ஆகியவற்றுடன், வெறும் ஒன்றரை ஆண்டுகளில் 10 அடி உயரம் வளர்ந்து பலன் தரத் தொடங்கியுள்ள பலாமரம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. மேலும், இன்டியன் ஹெட் ஜிஞ்சர், காக்டஸ் போன்ற அலங்காரச் செடிகளையும் இவர்கள் பராமரித்து வருகின்றனர். “இயற்கையோடு இணைந்து வாழ்வது எங்களுக்குப் பெரும் மனநிம்மதியைத் தருகிறது” என மருத்துவர் சந்திரசேகர் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
இந்தத் தோட்டத்தின் மற்றொரு சிறப்பம்சம் அதன் இயற்கை உர மேலாண்மை ஆகும். குடும்பத் தலைவி யசோதா இது குறித்துக் கூறுகையில், வீட்டில் சேரும் காய்கறிக் கழிவுகள் மற்றும் உதிரும் இலைகளைத் தரையடியில் உள்ள சிமெண்ட் தொட்டியில் சேகரித்து, அவற்றை இயற்கை முறையில் மக்க வைத்து உரமாக்குவதாகத் தெரிவித்தார். கழிவுகள் கெட்டுப்போகாமல் இருக்க உப்பு மற்றும் யூரியாவைக் கலந்து, பின்னர் பொட்டாஷ், யூரியா மற்றும் வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை 1:2 என்ற விகிதத்தில் கலந்து செடிகளுக்கு இடுகின்றனர். இந்த இயற்கை உரம் செடிகளுக்கு ஊட்டம் அளிப்பதுடன் பூச்சிகளை விரட்டவும் உதவுகிறது. மணத்தக்காளி, துளசி, கற்றாழை போன்ற 150-க்கும் மேற்பட்ட செடிகளை இவர்கள் வளர்க்கின்றனர்.
பசுமை நிறைந்த இந்தத் தோட்டத்திற்குத் தேன்சிட்டு, குயில், மைனா போன்ற பறவைகள் தினந்தோறும் வந்து செல்வதால், அவற்றின் ரீங்காரம் தங்களது மன அழுத்தத்தைப் போக்குவதாகத் தம்பதியினர் தெரிவிக்கின்றனர். நகர்ப்புறங்களில் வீடுகளைச் சுற்றி இடம் இருப்பவர்கள், இது போன்ற சிறிய காடுகளை உருவாக்குவதன் மூலம் தட்பவெப்ப நிலையைச் சீராக வைப்பதுடன், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்த முடியும் என்பதற்கு இந்தப் போடி தம்பதியினரின் தோட்டம் ஒரு சிறந்த சான்றாகும்.

















