தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், போடி அருகே உள்ள டொம்புச்சேரி கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய பெய்த அதி கனமழையினால் ஏற்பட்ட விபத்தில் நான்கு பசுங்கன்றுகள் பரிதாபமாக உயிரிழந்தன.
டொம்புச்சேரி பழனி ஆண்டவர் கோயில் பின்புறம் சண்முகம் என்பவருக்குச் சொந்தமான பழைய மண் வீடு ஒன்று உள்ளது. நீண்ட காலமாகப் பராமரிப்பின்றிப் பயன்பாட்டில் இல்லாத இந்த வீட்டின் உறுதித்தன்மை மழையினால் வெகுவாகக் குறைந்திருந்தது. இந்த வீட்டின் சுவரை ஒட்டி அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி (43) என்ற பெண்மணி, ஒரு தற்காலிகத் தகரக் கொட்டகை அமைத்துத் தனது பசுங்கன்று குட்டிகளைப் பராமரித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையில் இந்த மண் சுவர் ஊறிப்போய் திடீரென இடிந்து விழுந்தது. சுவர் விழுந்த வேகத்தில் அங்கிருந்த தகரக் கொட்டகை நசுங்கியதில், அதனுள் கட்டப்பட்டிருந்த நான்கு பசுங்கன்று குட்டிகளும் இடிபாடுகளுக்குள் சிக்கிச் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தன.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் டொம்புச்சேரி கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். வாழ்வாதாரமாக வளர்த்து வந்த கன்று குட்டிகளை இழந்த லட்சுமி, தனக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார். உயிரிழந்த கன்று குட்டிகளை கால்நடை மருத்துவர்கள் மூலம் இன்று உடற்கூறாய்வு செய்த பின்னர், முறையாக அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் இது போன்ற பழைய மண் சுவர்கள் இடியும் அபாயம் இருப்பதால், மக்கள் தங்கள் கால்நடைகளைப் பாதுகாப்பான இடங்களில் கட்ட வேண்டும் என வருவாய்த்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
















