டிவி விவாதத்தில் அரங்கிற்கு வெளியே தம்பிமார்கள் மீது கொலைவெறித் தாக்குதல்

சென்னையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி மற்றும் அக்கட்சியின் இளைஞரணி நிர்வாகிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம், தமிழக அரசியலில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. “சட்டம் ஒழுங்கு சீர்குலைவின் உச்சக்கட்டமாகத் திமுகவின் கூலிப்படை என் மீதும் என் தம்பிகள் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது” என இடும்பாவனம் கார்த்தி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள தந்தி நிர்வாகத்திற்குச் சொந்தமான அரங்கில், ‘நியூஸ் 18 தமிழ்நாடு’ தொலைக்காட்சியின் ‘மக்கள் சபை’ விவாத நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நேற்று மாலை நடைபெற்றது. இதில் திமுக சார்பில் செந்தில்வேல், நாம் தமிழர் கட்சி சார்பில் இடும்பாவனம் கார்த்தி மற்றும் பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர். விவாதத்தின் போது திமுக பேச்சாளர் செந்தில்வேல் பேசத் தொடங்கியபோது, அங்கிருந்த பாஜகவினர் கேலி மற்றும் கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் செந்தில்வேலை ஒருமையில் விளித்ததால் கடும் ஆத்திரமடைந்த அவர், அரங்கத்திலேயே ஆவேசமாக முழக்கமிட்டுள்ளார்.

இந்த மோதலின் உச்சமாக, “நான் நினைத்தால் நூறு பேரை இங்கு இறக்கிக் காட்டட்டுமா?” எனச் சவால் விடுத்த செந்தில்வேல், நெறியாளர் மற்றும் சக பங்கேற்பாளர்கள் சமாதானம் செய்தும் அதனைக் கேட்காமல் விவாதத்திலிருந்து பாதியிலேயே வெளியேறினார். இதற்கிடையே, அரங்கிற்கு வெளியே திரண்டிருந்த கும்பல் ஒன்று, விவாதம் முடிந்து வெளியே வந்த இடும்பாவனம் கார்த்தி மற்றும் அவருக்குப் பாதுகாப்பாக வந்த 20-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சி இளைஞரணி நிர்வாகிகள் மீது திடீர் தாக்குதலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

இந்தச் சம்பவம் குறித்து தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள இடும்பாவனம் கார்த்தி, “அரங்கிற்குள் பேச முடியாமல் வெளியேறிய திமுக பேச்சாளர், குண்டர்களைத் திரட்டி மிரட்டியுள்ளார். ஜனநாயக ரீதியிலான விவாத அரங்கில் கருத்து மோதல்களை எதிர்கொள்ள முடியாமல், வன்முறையைக் கையில் எடுப்பது கண்டிக்கத்தக்கது. என்னைச் சூழ்ந்து கொண்டு தாக்கிய திமுக கூலிப்படையின் செயல், தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது” என்று பதிவிட்டுள்ளார். காயமடைந்த இளைஞரணி நிர்வாகிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. தொலைக்காட்சி விவாத மேடை வன்முறைக்களமாக மாறியிருப்பது சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version