முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்த திட்டத்தில், நலத்திட்டஉதவி பெறுவதற்காக சரக்கு வாகனத்தில் வரப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பல மணி நேரம் வெயிலில் காக்க வைக்கப்பட்டதால் பரபரப்பு

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தனியார் திருமண மண்டபத்தில், டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் தாயுமானவன் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணிகளை துவக்கி வைத்தார். மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன் ராஜ்குமார் பன்னீர் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி காலை 10 மணிக்கு மேல் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், மாவட்டம் முழுவதும் இருந்து நலத்திட்ட உதவிகள் பெறுவதற்காக பயனாளிகள் அழைத்து வரப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் சரக்கு வாகனம் மூலம் அழைத்து வரப்பட்ட நிலையில் காலை 9 மணி முதல் நிகழ்ச்சி நிறைவடைந்த 12 மணி வரை மண்டபத்திற்கு வெளியே வெயிலில் காக்க வைக்கப்பட்டனர். முதலமைச்சர் பேசி முடித்து மண்டபத்திற்கு உட்பட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை நிறைவு செய்த பின் மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் வெயிலில் காத்திருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். குறைந்தபட்சம் மாற்றுத்திறனாளிகள் நிழலில் அமர வைக்கப்பட்டு இருந்தால் மனிதாபிமானம் மிக்க நடவடிக்கையாக இருந்திருக்கும் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Exit mobile version