கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்வில் சினிமா பிரபலங்களுக்கு முக்கியத்துவம் – எழும் கேள்விகள் !

சென்னை: “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்ற தலைப்பில் நேற்று சென்னை நகரில் நடைபெற்ற அரசு விழா பெரும் கவனத்தை பெற்றது. மாணவர்களின் அனுபவங்கள், அரசின் பல்வேறு கல்வித் திட்டங்களின் பயன்கள் ஆகியவை மேடையில் வெளிப்பட்ட நிலையில், சினிமா பிரபலங்களின் பங்கேற்பே அதிகம் பேசப்பட்ட அம்சமாக மாறியுள்ளது.

முதல்வர் மு.க. ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த விழாவில், புதுமைப்பெண், நான் முதல்வன் போன்ற திட்டங்கள் மாணவர்களுக்கு எவ்வாறு உதவின என்பது நேரடியாக வெளிப்படுத்தப்பட்டது. வறுமையையும், கடின சூழல்களையும் எதிர்கொண்டு கல்வியில் முன்னேற்றம் கண்ட மாணவ, மாணவியர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்தது அனைவரையும் நெகிழச்செய்தது.

ஆனால், இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர்கள் வெற்றிமாறன், தியாகராஜா குமாரராஜா உள்ளிட்ட பலர் மேடையேறி பேசியது விமர்சனங்களை கிளப்பியுள்ளது. “இரண்டு டிகிரி படித்தும் வேலை கிடைக்காமல் சினிமா தான் வாழ்க்கையை மாற்றியது” என்று சிவகார்த்திகேயன் கூறியது, புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து இயக்குநர்கள் விமர்சித்தது என பல உரைகள் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டன.

விமர்சனங்கள் என்ன ?

  1. கல்வி சார்ந்த அரசு நிகழ்வில் ஏன் சினிமா பிரபலங்களுக்கே அதிக இடம் கொடுக்கப்பட்டது?
  2. எழுத்தாளர்கள், ஐஏஎஸ்/ஐபிஎஸ் அதிகாரிகள், தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் சாதித்த முகங்கள் புறக்கணிக்கப்பட்டதாக கேள்விகள் எழுகின்றன.
  3. பல இளைஞர்கள் துறைகளில் சாதனை படைத்தும் இத்தகைய மேடைகளில் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதும் குற்றச்சாட்டு.
  4. கல்லூரிகளில் போல அரசும் “இன்ஸ்டாகிராம் – சினிமா பிரபலங்களை” பயன்படுத்துகிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
  5. சிலர், “விஜய்க்கு உள்ள சினிமா செல்வாக்கை சமாளிக்க, அரசு சினிமா பிரபலங்களை முன்னிறுத்துகிறது” எனவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அரசு தரப்பின் விளக்கம்
ஆனால், திமுக தரப்பினர் வேறு வாதம் முன்வைக்கின்றனர்:

அரசின் கல்வித் திட்டங்களை பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் எளிதாக கொண்டு செல்ல பிரபல முகங்கள் தேவை.

சினிமா உலகத்தைச் சேர்ந்தவர்கள் பேசினால், அது அதிகம் கவனத்தை ஈர்க்கும்; சமூக வலைதளங்களில் டிரெண்டாகும்.

இது அரசின் விளம்பர யுக்தியாக புதியது அல்ல; முந்தைய காலங்களிலும் பயன்படுத்தப்பட்ட வழக்கமான முறையே.

இருப்பினும், “சினிமா பிரபலங்களுக்கு இடம் கொடுக்கப்பட்ட அளவுக்கு, கல்வித் துறையில் சாதித்த மாணவர்கள், எழுத்தாளர்கள், அதிகாரிகள் போன்றோருக்கும் வாய்ப்பு கொடுக்கப்படலாம்” என்ற விமர்சனங்களும் ஒரே நேரத்தில் வலுப்பெற்று வருகின்றன.

Exit mobile version