மதுரையில் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநில மாநாட்டில், கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்ததால் இன்னோவா கார் ஒன்று சேதமடைந்தது. இந்த சம்பவத்தையடுத்து, கார் உரிமையாளர் தினேஷுக்கு புதிய கார் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியிருந்தது.
மாநாட்டுக்காக 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கும் பணிகள் நடைபெற்றபோது, கிரேனின் பெல்ட் அறுந்து கம்பம் சாய்ந்ததில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த இன்னோவா கார் நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏதுமில்லை. பின்னர், சேதமடைந்த காருக்கு பதிலாக புதிய வாகனம் வழங்கப்படும் என தவெக சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், “புதிய கார் வழங்கப்படவில்லை” என சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட செய்திகளை தினேஷ் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததில்,
“என்னுடைய காரை என் விருப்பப்படி தயார் செய்து வைத்துள்ளனர். ஆனால், அந்த காரை நான் தவெக தலைவர் விஜய் கையால் வாங்கிக் கொள்ளவேண்டும் என்ற ஆசையுடன் காத்திருக்கிறேன். நான் வேதனையடைந்திருப்பதாக பரப்பப்படும் செய்திகள் உண்மையல்ல. பழைய காரை விட சிறந்த வாகனம்தான் எனக்கு கிடைக்க இருக்கிறது” என்றார்.
இதனால், மாநாட்டில் ஏற்பட்ட விபத்து தொடர்பான தவறான செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ள நிலையில், உரிமையாளர் நேரடியாக விளக்கம் அளித்திருப்பது தெளிவை ஏற்படுத்தியுள்ளது.