காளையார்கோவில் அருகே முத்தூர் பகுதியில் விவசாயத்தை அழிக்கும் வகையில் நீர் பிடிப்புப் பகுதிகளில் செயல்பட்டு வரும் கிராவல் குவாரிக்குத் தடை விதிக்கக் கோரி, நான்கு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் தங்களது ஆதார் கார்டுகளை ஒப்படைக்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்தூர் புதுக்கண்மாய் இப்பகுதியின் மிக முக்கிய நீர் ஆதாரமாகும். இந்த கண்மாய் பாசனத்தை நம்பி சுமார் 250-க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள் நெல் மற்றும் சிறுதானிய சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், முத்தூர் பகுதியில் செம்மண் கிராவல் குவாரி அமைக்கக் கனிம வளத்துறையிடம் அனுமதி பெற்றுள்ள தனியார் தரப்பினர், விதிகளை முற்றிலுமாகப் புறந்தள்ளிவிட்டு கண்மாயின் நீர் பிடிப்புப் பகுதிகளிலேயே ராட்சத இயந்திரங்கள் மூலம் மண்ணை அள்ளி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
இந்தத் தடையற்ற மண் அகழ்வுப் பணியால் கண்மாய் கரை பலவீனமடைவதுடன், நிலத்தடி நீர்மட்டம் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், குவாரிப் பகுதியில் உள்ள மின்கம்பங்கள் சேதமடைந்து வருவதால் கிராமங்களுக்கு மின் விநியோகம் தடைபடும் சூழலும் நிலவுகிறது. தவறான ஆவணங்களைச் சமர்ப்பித்து இந்த அனுமதி பெறப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டும் கிராம மக்கள், விவசாயத்தைப் பலிகொடுத்து மண் அள்ளப்படுவதை ஏற்க முடியாது எனத் தெரிவிக்கின்றனர்.
குவாரிக்குத் தடை விதிக்கக் கோரி முத்தூர், வீரமுத்துப்பட்டி, மோர்குழி, மேப்பல் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நேற்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தங்களது ஆதார் கார்டு நகல்களை மாவட்ட ஆட்சியர் பொற்கொடியிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உடனடியாகக் குவாரியை மூட வேண்டும் என வலியுறுத்தினர்.
பொதுமக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் பொற்கொடி, கனிம வளத்துறை துணை இயக்குநரை அழைத்து உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்யவும், விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் குவாரி உரிமத்தை ரத்து செய்யவும் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அதிகாரிகளின் இந்த உறுதிமொழியைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். இயற்கை வளங்களைச் சுரண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் வரை தங்களது அறப்போராட்டம் தொடரும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.













