திண்டுக்கல் மாவட்டத்தின் முதன்மையான சர்வதேசச் சுற்றுலாத் தலமான கொடைக்கானலுக்கு, விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால், நகரின் தாங்கும் திறன் (Carrying Capacity) மற்றும் எதிர்காலச் சுற்றுலா மேம்பாடு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, இந்தியன் தொழில்நுட்பக் கழகத்தின் (IIT) ஆய்வுக் குழுவினர் கொடைக்கானலில் முகாமிட்டு, பல்வேறு துறையினருடனும், உள்ளூர் வர்த்தகர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடனும் விரிவான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர்.
தனியார் தங்கும் விடுதி ஒன்றில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வருவாய்த்துறை, வனத்துறை, நெடுஞ்சாலைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உட்பட 10க்கும் மேற்பட்ட அரசுத் துறை அதிகாரிகளும், உள்ளூர் வர்த்தகர்களும் கலந்து கொண்டனர். கொடைக்கானலின் சுற்றுலா வருகை மற்றும் தங்கும் திறன் குறித்து வர்த்தகர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. வார இறுதி நாட்களில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாகக் கொடைக்கானல் வாழ் மக்கள் பாதிக்கப்படுவதில்லை என்றும், ஆனால், சுற்றுலாப் பயணிகளுக்காக, கூடுதல் வாகன நிறுத்துமிடங்களை ஏற்படுத்துதல், பிரதானச் சாலைகளை அகலப்படுத்துதல், மற்றும் நகருக்குள் வர ஒரு வழி, வெளியேற ஒரு மாற்றுச் சாலை அமைத்தல் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் உள்ளூர் வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், சுற்றுலாத் தலங்களில் போதிய வாகன நிறுத்துமிடங்கள் இல்லாதது குறித்தும் நடவடிக்கை எடுக்கக் கோரினர்.
சுகாதாரம் குறித்துப் பேசிய ஐஐடி குழுவினர், கொடைக்கானலில் சேகரிக்கப்படும் குப்பைகள் முறையாக மறுசுழற்சி செய்யப்படுகிறதா அல்லது அப்படியே குப்பைகளாகக் கிடக்கிறதா என்று விசாரித்தனர். மலைப் பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், ஒரு சில இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் காணப்படுவதாகக் கவலை தெரிவித்தனர். இதனைத் தவிர்க்க, வர்த்தகர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர். மேலும், மலைக் கிராமங்களில் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தவிர்க்க, ராட்சத குப்பைத் தொட்டிகளை நிறுவ ஆலோசனை செய்யப்பட்டது. நகரப் பகுதிகளுக்குள் காட்டெருமைகளின் எண்ணிக்கை அதிகரிப்பால், அவை அடிக்கடி நகர்ப்பகுதிகளுக்குள் உலா வருவது குறித்தும் கூட்டத்தில் பேசப்பட்டது. வனத்துறையினர் இதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்தனர்.
மேலும், கடை வைத்துள்ள வியாபாரிகள் சிலர், உள்ளூர் மக்களுக்கு ஒரு பொருளைக் குறைந்த விலைக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக விலைக்கும் விற்பனை செய்வதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்துக் குழுவினர் விசாரித்தனர். இது சுற்றுலாப் பயணிகளின் மனக்குறைக்கு வழிவகுக்கும் என்பதால், முறையான விலையில் விற்பனை செய்யுமாறு வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. சுற்றுலா மேம்பாடு மற்றும் வளர்ச்சி குறித்துச் சுற்றுலாத் துறை அதிகாரிகளிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்குப் பதிலளித்த சுற்றுலா மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர், கொடைக்கானல் பகுதியில் உள்ள ஆறு முக்கியமான முருகன் கோவில்களை இணைத்து, ‘அறுபடை ஆன்மீகச் சுற்றுலா’ என்ற தலைப்பில் புதிய சுற்றுலாப் பயணத் திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாகத் தெரிவித்தனர்.
இந்த ஆன்மீகச் சுற்றலாவில், குறிஞ்சி ஆண்டவர் முருகன் கோவில், பூம்பாறை முருகன் கோவில், தாண்டிக்குடி முருகன் கோவில், பழம்புத்தூர் முருகன் கோவில், கும்பூர் முருகன் கோவில், மற்றும் வில்பட்டி வெற்றி வேலப்பர் முருகன் கோவில் உள்ளிட்ட ஆறு கோவில்களையும் ஒரே பாதையில் தரிசிக்கும் வகையில் இந்தத் திட்டம் அமையும். இது ஆன்மீகச் சுற்றுலாப் பயணிகளை மேலும் ஈர்க்கும் என்றும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய கூட்டத்தில் பெறப்பட்ட ஆலோசனைகள் மற்றும் தரவுகள் அனைத்தும், இந்தியன் தொழில்நுட்பக் கழகக் குழுவினரால் தொகுக்கப்பட்டு, சென்னைக்குக் கொண்டு செல்லப்படும். இந்தக் கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு, கொடைக்கானலின் தாங்கும் திறன், சுற்றுலா மேம்பாடு மற்றும் எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் குறித்த பரிந்துரைகள் விரைவில் தமிழக அரசுக்குச் சமர்ப்பிக்கப்படும் என்று ஐஐடி குழுவினர் தெரிவித்தனர்.


















