பீகார் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற உற்சாகத்துடன், வரவிருக்கும் 2026 தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில தேர்தல்களுக்கு பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. இதே நேரத்தில், வாக்காளர் பட்டியலில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் SIR பணியை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நடத்திய பிரம்மாண்ட பேரணியில் பேசிய மம்தா பானர்ஜி, பாஜகவை நோக்கி கூர்மையான எச்சரிக்கை விடுத்தார்.
பேரணியில் உரையாற்றிய மம்தா பானர்ஜி கூறியதாவது:
“குறித்துக் கொள்ளுங்கள்… 2029ம் ஆண்டு பாஜகக்கு மிக மோசமான வருடமாக இருக்கும். ஆட்சியை தக்க வைத்து கொள்ள முடியாது. எங்கள் மீது குறிவைத்தால், மொத்த நாடும் அதிரும்.” “3 வருடங்களில் செய்ய வேண்டிய பணியை 2 மாதங்களில் முடிக்க முயல்வது எப்படி சாத்தியம்? தவறான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்டுள்ள இந்த வாக்காளர் பட்டியல் மாநிலத்தையே பாதிக்கும் வகையில் உள்ளது. மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று அரசு முடிவு செய்யும் நிலை உருவாகியுள்ளது.”
பீகார் தேர்தல்
சமீபத்தில் நடந்த பீகார் தேர்தலில் 66 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டின. இதன் தாக்கத்தில்தான் பாஜக-நிதிஷ் கூட்டணி வெற்றி பெற்றது என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
இப்போது தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெறுவது குறித்து திமுக, கூட்டணி கட்சிகள், தவெக உள்ளிட்டவர்கள் ஆவேசமாக எதிர்த்து வருகின்றனர்.
“வங்க மொழியும் கலாசாரமும் வீழாது”
மேற்கு வங்கத்தை பலவீனப்படுத்த பாஜக முயல்கிறது என்றும் மம்தா விமர்சித்தார். “வங்க மொழி, கலாசாரம், மக்கள்… எதையும் வீழ்த்த முடியாது. என்னை தோற்கடிக்க நினைத்தால், முதலில் குஜராத்திலேயே பாஜக தோல்வி அடையும்,” என திடுக்கிடும் கருத்து தெரிவித்தார். மம்தாவின் இந்த எச்சரிக்கை, மேற்கு வங்க அரசியலில் புதிய சர்ச்சையை எழுப்பியுள்ளது.
















