மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் மீண்டும் தீபம் ஏற்றக் கோரி நடைபெற்று வரும் போராட்டங்கள் புதிய கட்டத்தை எட்டியுள்ளன. இந்த விவகாரத்திற்காகத் தீக்குளித்து உயிரிழந்த முருக பக்தர் பூர்ணசந்திரனின் 16-ஆம் நாள் துக்க அனுசரிப்பு நிகழ்வு மதுரையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், தமிழக அரசுக்கு நேரடி எச்சரிக்கை விடுத்ததுடன் பல்வேறு அரசியல் தலைவர்கள் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இந்த நிகழ்வில் ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மற்றும் பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு பூர்ணசந்திரனின் தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காடேஸ்வரா சுப்ரமணியம், “முருகப் பெருமானுக்காகவும், மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பதற்காகவும் பூர்ணசந்திரன் தனது உடலையே தீபமாக எரித்துத் தியாகம் செய்துள்ளார். அவரது இந்த அர்ப்பணிப்பு வீண் போகாது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்துவது தமிழக அரசின் கடமையாகும். ஒருவேளை அரசு இதில் மெத்தனமாக இருந்து தீபம் ஏற்றத் தவறினால், ஹிந்து முன்னணியும் லட்சக்கணக்கான முருக பக்தர்களும் இணைந்து மலையில் தீபம் ஏற்றுவது உறுதி. இதனை அரசு சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது; இது பக்தர்களின் உணர்வுப்பூர்வமான போராட்டம்,” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
அரசியல் ரீதியான விமர்சனங்களை முன்வைத்த அவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் எம்.பி. வெங்கடேசன் ஆகியோர் நக்சலைட் சிந்தனையைக் கொண்டவர்கள் என்று சாடினார். இந்து கடவுள்களையும் பெண்களையும் அவதூறாகப் பேசும் திருமாவளவன், ஒருபோதும் மற்ற மதங்களைப் பற்றிப் பேசுவதில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும், தி.மு.க. எம்.பி. கனிமொழி தீபத்தூணை ‘அளவைக்கல்’ என்று குறிப்பிட்டது முருக பக்தர்களைக் கொச்சைப்படுத்தும் செயல் என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார். திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தற்போது தென் தமிழகத்தில் ஒரு முக்கிய அரசியல் மற்றும் ஆன்மீகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ள சூழலில், ஹிந்து முன்னணியின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

















