ஓமலூர்: தமிழக மக்கள் கடவுளாக மதிக்கும் எம்ஜிஆரை விமர்சித்தால், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார் என, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி எச்சரித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் நிருபர்களிடம் பேசிய அவர்,
“எம்ஜிஆரை தமிழக மக்கள் தெய்வமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவரை திருமாவளவன் விமர்சிக்கிறார். இதுபோன்ற நடவடிக்கைகள் அவரை அரசியலில் இருந்து அழித்துவிடும்,” என்றார்.
அதிமுக பற்றி பேசும் போது,
“எங்கள் கட்சி ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்டது. பல்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் எங்களுடன் ஒற்றுமையாக செயல்படுகிறார்கள். இந்த ஒற்றுமையே திருமாவளவனுக்கு பொறுக்கவில்லை. அவர் நினைத்தது நடக்க வில்லை என்பதன் எரிச்சலால் தான் எம்ஜிஆர் மீது விமர்சனங்கள் வருகின்றன,”
என்று அவர் குற்றம்சாட்டினார்.
திமுக கூட்டணியைப் பற்றியும் இபிஎஸ் கருத்து தெரிவித்தார்.
“திமுக கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் தோன்றியுள்ளன. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளன. அந்த காலத்தில் சிறப்பான கூட்டணி அமையும்,”
என்றார்.
பாமக பொதுக்குழு விவகாரம் குறித்து அவர்,
“அது அவர்களின் உட்கட்சி விஷயம். வேறு கட்சியின் விவகாரத்தில் தலையிடுவது சரியல்ல,” என்றும் தெரிவித்தார்.