“முறைச்சா அடிப்பீங்களா !” சிக்கலில் திருமாவளவன் – வழக்கறிஞர் தாக்குதல் வழக்கில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்கு அருகே வழக்கறிஞர் ராஜீவ் காந்தி தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில், இருதரப்பின் புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து 2 வாரங்களில் முழுமையான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளது. ஒன்று வழக்கறிஞர் ராஜீவ் காந்தி தாக்கப்பட்டதாக கூறப்படும் புகாரின் அடிப்படையில், மற்றொன்று எதிர் தரப்பினரின் புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசிகவினர்மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 296 மற்றும் 115(2) ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 296-ஆம் பிரிவின் கீழ் 3 மாதம் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். 115(2) பிரிவின் கீழ் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.10,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

அதே நேரத்தில், வழக்கறிஞர் ராஜீவ் காந்தி மீது பிரிவு 126(2), 351(2), 352 ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, “எதன் அடிப்படையில் இருதரப்பினர்மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன?” என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நீதிமன்றம் மேலும், சம்பவம் நடந்த இடத்தின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, 2 வாரங்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, சம்பவம் குறித்து பேசும்போது திருமாவளவன் “வாகனத்தை மறித்து முறைத்தார்… நாலு தட்டு தட்டினோம்” என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து “முறைத்தால் தாக்குவீர்களா?” என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.வாய். சந்து கவாய் மீது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் காலணி வீச முயன்ற சம்பவத்துக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் நடந்ததாக கூறப்படுகிறது. அன்றைய தினம், சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றுவிட்டு திருமாவளவன் திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரது கார் வழக்கறிஞர் ராஜீவ் காந்தியின் ஸ்கூட்டியை மோதியதாக தகவல். இதனைத் தொடர்ந்து இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் காவல்துறையினர் தலையிட்டு இருதரப்பினரையும் சமாதானப்படுத்தியபோதும், பின்னர் மாறி மாறி புகார்கள் பதிவு செய்யப்பட்டன. ராஜீவ் காந்திக்கு ஆதரவாக சிலர் போராட்டம் நடத்த முயன்ற நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் சம்பவத்தை ஆராய 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யும் வகையில் விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

இந்த குழுவில் இணைத் தலைவர்கள் ஆர்.அருணாச்சலம் மற்றும் டி.சரவணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். நீதிமன்ற விசாரணை நடைபெறும் நேரத்தில், எந்த வகையிலும் நீதிநடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்காதபடி நடந்து கொள்ள வேண்டும் என்று பார்கவுன்சில் எச்சரித்துள்ளது.

Exit mobile version