விழுப்புரம்: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப்போகிறார் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், விசிக நாடாளுமன்ற உறுப்பினர் துரை. ரவிக்குமார் அதிமுக–பாஜக உறவை குறிவைத்து தீவிர விமர்சனங்களை முன்வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம் சாத்தனூரில் புதிய பயிலரங்கம் மற்றும் நூலக கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அமித்ஷா கூறினால் செங்கோட்டையன் மட்டும் அல்ல; எடப்பாடி பழனிச்சாமி கூட தவெகவில் இணையலாம்” என்று கடுமையாக குற்றஞ்சாட்டினார்.
“பாஜக–தவெக இணைப்பு வெளிப்படையாகிறது”
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், பாஜக அமைப்பின் நீட்சியே என விசிக தொடர்ந்து கூறி வந்ததை, தற்போதைய அரசியல் மாற்றங்கள் உறுதி செய்கின்றன எனவும் ரவிக்குமார் கூறினார். “சனாதன சக்திகள் தமிழ்நாட்டில் இடம் பிடிக்க திட்டமிட்டு செயல் படுகின்றன; அதில் தவெக ஒரு பங்குதான்”
என்றார்.
SIR பட்டியல் விவகாரம்
வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் பெரும் தவறுகள் உள்ளன எனவும், விழுப்புரம் தொகுதியில் ஆயிரக்கணக்கான படிவங்கள் திரும்ப பெறப்படவில்லை எனவும் ரவிக்குமார் குறிப்பிட்டார். “தேர்தல் ஆணையம் சர்வாதிகாரமாக செயல்படுகிறது. SIR திட்டம் தமிழ்நாட்டில் ஒரு கோடி மக்களை வாக்குரிமையில்லாமல் ஆக்கும் அபாயம் உண்டு” என அவர் எச்சரித்தார்.
செங்கோட்டையனின் தவெகவில் இணையக்கூடிய நிலையைப் பற்றி, “அவர் எப்போதும் சூழ்நிலையைப் பார்த்து தான் முடிவு செய்வார். இது அவரின் அரசியல் வாழ்வை பாதுகாப்பதற்கான முயற்சிதான்” என்றார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பற்றியும் ரவிக்குமார் கடும் விமர்சனம் முன்வைத்தார். “அமித்ஷா அழைத்தால், விஜய் கட்சியில் இணைய தைரியம் எடப்பாடிக்கும் இல்லை. அதை எதிர்க்க முடியாது” என்றார்.
















