ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சமூக நல்லிணக்கத்தையும் சமத்துவத்தையும் வலியுறுத்தி திருச்சியில் தொடங்கி மதுரை வரை மேற்கொண்டு வரும் ‘சமத்துவ நடைப்பயணம்’ ஒன்பதாவது நாளை எட்டியுள்ளது. கடந்த 2-ம் தேதி திருச்சியில் தொடங்கிய இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தின் ஒரு பகுதியாக, நேற்று மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைகோ தனது நடைப்பயணத்தைத் தொடர்ந்தார்.
நேற்று காலை கொட்டாம்பட்டி வழியாகத் தும்பைபட்டி கிராமத்திற்கு வருகை தந்த வைகோவிற்கு, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தும்பைபட்டியில் அமைந்துள்ள தியாகசீலர் கக்கன் அவர்களின் மணிமண்டபத்திற்குச் சென்ற வைகோ, அங்குள்ள கக்கனின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார். எளிமையின் இலக்கணமாக வாழ்ந்த மறைந்த தலைவர் கக்கனின் தியாக வாழ்வைப் போற்றும் வகையில் அங்கிருந்த புகைப்படக் கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார்.
அப்போது அங்கிருந்த பொதுமக்கள், கக்கன் மணிமண்டபம் போதிய பராமரிப்பின்றி காணப்படுவதாகவும், பல்வேறு தலைவர்களுடன் கக்கன் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படங்கள் சேதமடைந்து வருவதாகவும் வைகோவிடம் மனுக் கொடுத்தனர். இந்த மணிமண்டபத்தைச் சீரமைத்து, வரலாற்று ஆவணங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மக்களின் கோரிக்கையைக் கனிவுடன் கேட்ட வைகோ, “தியாகசீலர் கக்கன் அவர்களின் நினைவைப் போற்றும் இந்த மணிமண்டபத்தை மராமத்து செய்து புதுப்பிக்கத் தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன்” என உறுதி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து நேற்று மாலை மேலூரில் நடைபெற்ற பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் வைகோ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். நேற்றிரவு மேலூரிலேயே தங்கிய அவர், இன்று காலை மீண்டும் தனது நடைப்பயணத்தைத் தொடங்கி ஒத்தக்கடை நோக்கிப் புறப்பட்டார். இந்தப் பயணத்தின் போது மாநிலப் பொருளாளர் செந்தில் அதிபன், மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் தி.மு. ராஜேந்திரன், நடைப்பயண ஒருங்கிணைப்பாளர் சு. ஜீவன், மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் மார்நாடு, பசும்பொன் மனோகரன், வி.கே. சுரேஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். மதுரையை நோக்கி நகரும் இந்த நடைப்பயணம், வழியெங்கும் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
