“லீவு கேன்சல் பண்ணிடுவேன் !” : சிறுமியை செல்லமாக கண்டித்த ஆட்சியர்

திருவள்ளூர்: “மழைல சைக்கிள் ஓட்டலாமா? வீட்டுக்குள் போங்க… இல்லேன்னா லீவு கேன்சல் பண்ணிடுவேன்!” என சிறுமியை நகைச்சுவையாக கண்டித்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் அவர்களின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வங்கக் கடலில் உருவான மொந்தா புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் சில பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மழை பாதிப்பு நிலைமைகளை நேரில் பார்வையிட ஆட்சியர் பிரதாப் செவ்வாய்க்கிழமை சுற்றுப்பார்வைக்கு சென்றார். அப்போது, மழையில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த ஒரு சிறுமியை பார்த்த அவர், காரை நிறுத்தி நெருங்கினார்.

“வீட்டுக்குள் போங்க, மழைல சைக்கிள் ஓட்டலாமா? வெளியே இருந்தீங்கன்னா லீவு கேன்சல் பண்ணிடுவேன்!” எனச் சிரித்தபடியே சொல்லிய ஆட்சியரின் குரல் கேட்க, அங்கு இருந்தவர்கள் அனைவரும் சிரித்தனர். சிறுமி வெட்கப்பட்டு தாயின் பின்னால் ஒளிந்த காட்சி வீடியோவாக பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, “ஆட்சியர் குழந்தைகளுடன் இப்படி பழகுறது ரொம்ப நன்றாக இருக்கு” என பலரும் பாராட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பல மாவட்ட ஆட்சியர்கள் மாணவர்களுடன் நேரடியாக உரையாடி, அவர்கள் ட்வீட்களுக்கு பதிலளித்து, சிரிப்பூட்டும் சம்பவங்களிலும் பங்கேற்று வருகின்றனர். இதனுடன் திருவள்ளூர் ஆட்சியர் பிரதாப் அவர்களின் இந்த நட்பு முறை நடத்தை இணையத்தில் தற்போது பேசுபொருளாகி வருகிறது.

Exit mobile version