முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து விஜயின் கருத்தை வரவேற்கிறேன் : அண்ணாமலை

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் குறித்த தவெக தலைவர் விஜயின் கருத்தை வரவேற்றுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “முதல்வரின் வெளிநாட்டு பயணத்தின் பெயரில் எத்தனை ஒப்பந்தங்கள் கையெழுத்தானது? இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். யாராவது குரல் கொடுத்தால் உடனே ‘பாஜக டீம்’ என சொல்லும் பழக்கம் திமுகவுக்கு உள்ளது. விஜயின் கருத்து சரியான கேள்வி எழுப்புகிறது,” எனக் குறிப்பிட்டார்.

தினகரன் – கூட்டணி பேச்சுவார்த்தை

அண்ணாமலை மேலும், “அரசியலில் நிரந்தர எதிரி என்பதில்லை. டிடிவி தினகரனை சந்தித்து மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டுகோளை வலியுறுத்தியுள்ளேன். அவர் முடிவுக்காக டிசம்பர் வரை காத்திருக்கிறோம். தேர்தல் சூடு வரும் போது சிறிய மனஸ்தாபங்கள் மாறும் என நம்புகிறேன்,” என்றார்.

மத்திய அரசு – முதலீடு

ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பில் முதலீடு செய்யும் இரண்டு நிறுவனங்களும் மத்திய அரசின் நிறுவனங்களே என அவர் தெரிவித்தார். “அதனை வெளிப்படையாக சொல்ல திமுக அரசு ஏன் தயங்குகிறது ? மத்திய அரசு நிதியுடன் உருவாகும் கப்பல் கட்டும் தளத்தையும் தனியார் முதலீடு என்று காட்ட முயற்சிக்கிறார்கள்,” என்று அவர் குற்றம் சாட்டினார்.

சபாநாயகர் குறித்து விமர்சனம்

சபாநாயகர் அப்பாவு குறித்து கருத்து தெரிவித்த அண்ணாமலை, “சட்டசபையில் முதல்வரை விட சபாநாயகர் தான் அதிகமாக பேசுகிறார். அவர் தனது பொறுப்பை திறம்பட செய்வது நலம்; அரசியல் பேசுவது தவிர்க்கப்பட வேண்டும்,” என்றார்.

ரஜினியைப் பற்றி

“நான் ரஜினியை அடிக்கடி சந்திக்கிறேன். அவர் ஆன்மிகம் குறித்துப் பேசுவார், சில அறிவுரைகள் தருவார். அவரை குருவாகக் காண்கிறேன். நட்பு அடிப்படையில்தான் சந்திப்புகள் நடக்கின்றன,” எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கார்கே மீது குற்றச்சாட்டு

ஜிஎஸ்டி தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை விமர்சித்த அவர், “முதலில் காங்கிரஸே மாநிலங்களுக்கு கான்ஸ்டிட்யூஷனல் கேரண்டி தராமல் தவறு செய்தது. பின்னர் மோடி அரசே அதை நிறைவேற்றியது. மூத்த தலைவரான கார்கே தவறான முறையில் பேசுவது அழகல்ல,” எனக் கூறினார்.

Exit mobile version