சென்னை : தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் தன்னைப் பற்றிய விமர்சனங்கள் எழுந்ததையடுத்து, நடிகை அம்மு ராமசந்திரன் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்தில், “தெரு நாய்கள் இல்லாத நகரம் வேண்டுமா? அல்லது தெரு நாய்களுக்கும் நகரத்தில் உரிமை உண்டா?” என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இதில் கலந்துகொண்ட அம்மு ராமசந்திரன், தெரு நாய்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்கும், ட்ரோல்களுக்கும் ஆளானது.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட அவர் கூறியதாவது:
“நான் பயந்து இந்த வீடியோவை வெளியிடுகிறேன் என்று நினைக்காதீர்கள். அந்த நிகழ்ச்சியில் உண்மையில் என்ன நடந்தது என்பதைச் சொல்லவே இந்த வீடியோவை வெளியிடுகிறேன். 8 மணி நேரம் ரெக்கார்ட் செய்ததை வெறும் 45 நிமிடம் மட்டும் எடிட் செய்து ஒளிபரப்பியுள்ளனர்.
எங்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை விட எதிர்தரப்பினருக்கே அதிக வாய்ப்பு கொடுக்கப்பட்டது. எங்களின் தரப்பில் வைக்கப்பட்ட நியாயங்களை கோபிநாத் கேட்டுக்கொள்ளவில்லை. இரண்டு தரப்பையும் மோதவைத்து நிகழ்ச்சியை அழகுபடுத்த முயன்றார்கள் போல தெரிகிறது.
இதனால் பாதிக்கப்படுவது வாயில்லாத ஜீவன்கள்தான். அந்த ஜீவன்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே நான் நிகழ்ச்சியில் பங்கேற்றேன். மற்றபடி யாருடைய வெறுப்பையும் சம்பாதிக்க அல்ல. நானும் ஒரு மனிதன் தான்; எனக்கும் குடும்பம் உண்டு” என அம்மு ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.