சென்னை: “ஒரு நாள் கட்சி தொடங்கி மறுநாள் முதல்வராக வேண்டும் என்ற எண்ணத்தோடு சிலர் அரசியலுக்கு வருகின்றனர்,” என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம் செய்துள்ளார். இந்த கருத்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை நோக்கி செய்யப்பட்ட மறைமுக தாக்குதலாகப் பார்க்கப்படுகிறது.
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் 93வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, முதல்வர் மு.க. ஸ்டாலின் அவரை நேரில் சென்று வாழ்த்தினார். அவருடன் அமைச்சர்கள் கே.என். நேரு, மா. சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடைபெற்ற வீரமணி பிறந்தநாள் பொது விழாவில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
விழாவில் உரையாற்றிய உதயநிதி கூறியதாவது:
“1979-ல், எனக்கு இரண்டு வயதுதான். கலைஞர் வீட்டின் முன்பு, நானும், இன்று நம் முதல்வருமான ஸ்டாலினும், கலைஞரும் – கருப்பு சட்டை அணிந்து இந்தி திணிப்பை எதிர்த்து போராட்டத்தில் கலந்து கொண்டோம். அந்த வழியில் தொடரும் மூன்றாம் தலைமுறை பெரியாரிஸ்டாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.
சிலர் நேற்று கட்சி தொடங்கியதும், உடனே முதல்வர் ஆசை படுகின்றனர். ஆனால் எங்கள் இயக்கத்தில் கவுன்சிலர் பதவி கூட முக்கியமில்லை; கொள்கையும், மக்கள் பணியும் மட்டுமே முதன்மை.”
அதே நேரத்தில், 83 ஆண்டுகளாகப் பொதுவாழ்க்கையில் செயல்பட்டு வரும் வீரமணி, திராவிட இயக்க வரலாற்றின் உயிருடன் நிற்கும் சாட்சியாக உள்ளார் என்றும் அவர் பாராட்டினார். “பெரியார் கொள்கைகள் இன்று நாடு முழுவதும் பரவிக் கொண்டிருக்கின்றன; உலகமே கொண்டாடுகிறது. புதிய தலைமுறை பெரியாரைப் படித்து, கொள்கைகளை ஏற்றுக்கொள்வது மிகப்பெரிய மாற்றம்” எனவும் உதயநிதி தெரிவித்தார்.
















