கோவை:
அதிமுகவில் ஏற்பட்ட குழப்பத்திற்கு பின்னர், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று டெல்லிக்கு புறப்பட்டார். இதனால், அவர் பாஜக மூத்த தலைவர்களை சந்திக்கிறார் என்ற தகவல் பரவியது.
அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்க 10 நாள் அவகாசம் கொடுத்திருந்த செங்கோட்டையனின் அறிவிப்புக்கு அடுத்த நாளே, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரின் அமைப்பு செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் பதவிகளை நீக்கியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, செங்கோட்டையன் ஆதரவாளர்கள் சுமார் ஆயிரம் பேர் ராஜினாமா செய்தனர். மேலும், முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் அவருக்கு வெளிப்படையான ஆதரவை தெரிவித்தனர்.
இந்நிலையில், டெல்லி புறப்படுவதற்கு முன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “பாஜக தலைவர்களை சந்திக்க வரவில்லை. நான் ஹரித்துவார் மனநிம்மதிக்காக செல்கிறேன்” என்று விளக்கம் அளித்தார்.
கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டதற்கு அவர், “தொண்டர்கள் வந்து ஆறுதல் கூறி சென்றனர். நியாயமான கோரிக்கையை வலியுறுத்தியதால் பலரும் என்னை ஆதரித்து வருகின்றனர்” என்று தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் யாராவது தொடர்பு கொண்டார்களா என்ற கேள்விக்கு, “நோ கமெண்ட்ஸ்” என செங்கோட்டையன் பதிலளித்தார்.
 
			















