“எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை; ஆனால் அரசியலில் பெரும் இழப்பு அன்புமணிக்கே ஏற்படும்” என பா.ம.க., நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூற்றால், அந்தக் கட்சியில் பரபரப்பு நிலவுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி பா.ம.க., பொதுக்குழுவில் ராமதாஸ் – அன்புமணி இடையே ஏற்பட்ட முரண்பாடு எட்டு மாதங்களை கடந்தும் நீடித்து வருகிறது. இருவரும் தனித்தனியாக பொதுக்குழு கூட்டங்களை நடத்தி, தாங்களே தலைவர் என அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து, ராமதாஸ் மகன் அன்புமணியை கடுமையாக விமர்சித்து வருகிறார். அன்புமணி இதுவரை நேரடியாக பதில் அளிக்கவில்லை.
இதற்கிடையில், ஜூன் 24-ஆம் தேதி மனைவி சரஸ்வதியுடன் 60-வது திருமண நாளைக் கொண்டாடிய ராமதாஸ், ஆகஸ்ட் 24-ஆம் தேதி சுசீலாவுடன் 50-வது திருமண நாளையும் கொண்டாடினார். அந்த விழாவின் புகைப்படங்கள் வெளியானதால், பா.ம.க., வட்டாரத்தில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. சுசீலாவுடன் இருக்கும் ராமதாஸ் புகைப்படங்களை அன்புமணி ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, கடும் விமர்சனங்களை எழுப்பினர். இதற்குப் பின்னணியில் அன்புமணியே இருப்பதாகக் கூறப்பட்டதால், ராமதாஸின் அதிருப்தி மேலும் அதிகரித்தது.
இந்த நிலையில், அன்புமணிக்கு எதிராக 16 குற்றச்சாட்டுகள் கூறி விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. அதன் காலக்கெடு முடிந்த நிலையில், நேற்று தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் பா.ம.க., ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்றது.
அதில் சிலர், “திருமண நாள் புகைப்படங்களை வெளியிட்டு, ராமதாஸின் நற்பெயரை கெடுக்கும் முயற்சியில் அன்புமணி ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர்; அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்த ராமதாஸ், “என் தனிப்பட்ட விவகாரங்களை நான் பார்த்துக்கொள்கிறேன். என்னை அசிங்கப்படுத்தி, வன்னியர்களிடம் இருந்து அன்னியப்படுத்த முயற்சி செய்கின்றனர். எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை; இதுவரை எந்த அரசு பதவியிலும் நான் இருந்ததில்லை, இனியும் இருக்கப் போவதில்லை. ஆனால், என்னை அவமதித்தால் அரசியலில் பெரும் இழப்பு அன்புமணிக்கே வரும்” எனக் கூறினார்.

















