மிகவும் கனத்த இதயத்துடன் பூடான் வந்துள்ளேன் : பிரதமர் மோடி உருக்கம்

திம்பு: டெல்லி கார் குண்டு வெடிப்பு நாட்டை உலுக்கியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தற்போது பூடானில் இருநாள் அரசு சுற்றுப்பயணத்தில் உள்ளார். இந்தப் பயணத்தின் தொடக்க நாளிலேயே, டெல்லி வெடிப்பை நினைத்து உருக்கமான மனநிலையுடன் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

தலைநகர் திம்புவில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “டெல்லியில் நடந்த கொடூரமான சம்பவம் எனது இதயத்தைக் கனக்கச் செய்துள்ளது. மிகவும் கனத்த மனநிலையுடன் பூடான் வந்துள்ளேன். டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நாடு முழுவதும் ஆதரவு அளிக்கப்படும்,” என்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, “இந்த தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் யாரும் தப்பிக்க முடியாது. நீதியின் முன் நிறுத்தப்படும் வரை விசாரணை தொடரும். சதிக்காரர்கள் எவரும் விடுபடமாட்டார்கள். இந்த சதியின் வேர் வரை சென்று, பின்னால் இருப்பவர்களை கண்டுபிடித்து கடுமையாக தண்டிப்போம். கோழைத்தனமான தாக்குதலுக்கு பொருத்தமான பதிலடி வழங்கப்படும்,” என்றார்.

இந்நிலையில், டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து நாளை (நவம்பர் 12) மாலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பூடானில் இருந்து நாளை புறப்படும் பிரதமர் மோடி, தில்லி வந்து நேரடியாக அந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

Exit mobile version