தெரியல.. வந்தா தான் தெரியும் ” – ஓபிஎஸ், செங்கோட்டையன் கூட்டணி குறித்து எடப்பாடி ரியாக்‌ஷன் !

ராமநாதபுரம்: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவில் கலந்து கொள்ளும் தருணத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியிடம், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் இணைந்து வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “தெரியல… வந்தா தான் தெரியும். வந்ததும் பதில் சொல்றேன்” என்று சிரித்தபடி கூறினார்.

தற்போது தமிழக அரசியல் சூழலில் அதிமுக உட்கட்சி நிலைமை மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. சமீபத்தில், அதிமுக மூத்த நிர்வாகி செங்கோட்டையன், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தலைவர்களை ஒருங்கிணைக்க வேண்டுமென கோரியிருந்தார். இதற்கு கட்சி தலைமையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தானே முயற்சி எடுக்கப் போவதாகவும் 10 நாள் அவகாசம் கொடுத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனின் கட்சிப் பொறுப்புகளை நீக்கி அறிவிப்பு வெளியிட்டார். மேலும், அவரின் ஆதரவாளர்களும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

சில நாட்கள் அமைதியாக இருந்த செங்கோட்டையன், இன்று பசும்பொன் குருபூஜையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து ஒரே காரில் வந்தார். பசும்பொன்னில் டிடிவி தினகரனும் இவர்களுடன் இணைந்தார். மூவரும் இணைந்து முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்தினர்.

இதனிடையே, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பசும்பொனில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தேவர் ஐயா அனைவருக்கும் பொதுவான தலைவர். எம்.ஜி.ஆர் அவரை அரசு விழாவாகக் கொண்டாட அறிவித்தார். சட்டமன்றத்தில் உருவப்படம் அமைத்தவர் ஜெயலலிதா. தேவருக்குப் பாரத் ரத்னா வழங்க வேண்டும் என அதிமுக சார்பில் அமித்ஷாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது,” என கூறினார்.

அதன்பின், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் இணைந்து பசும்பொன் வந்தது குறித்து மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டபோது,
“தெரியல… வந்தா தான் தெரியும். வந்ததும் சொல்லுறேன்,” என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Exit mobile version