“நீங்கள் கேட்குறதுக்காகலாம் நான் பேச முடியாது !” : பெயர் சொல்லாமல் பதிலடி கொடுத்த விஜய்

ஈரோடு:
“நீங்கள் கேட்கிறீர்கள் என்பதற்காக எல்லாரையும் எதிர்த்து அரசியல் செய்ய முடியாது. 2026 சட்டசபை தேர்தலில் யார் களத்தில் இருக்கிறார்களோ அவர்களைத்தான் எதிர்ப்போம்” என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே சரளை பகுதியில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். அப்போது, “விஜய் அரசியல் பேச மாட்டார், வெறும் எட்டு நிமிடம்தான் பேசுகிறார்” என்ற விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர், “தனிப்பட்ட முறையில் பேசுவதே அரசியல் என்றால் அது எனக்கு வராது. பேச தெரியாது என்று இல்லை, உங்களைவிட அதிகமாகவே பேசத் தெரியும். ஆனால் அந்த அரசியல் பேச வரவில்லை” என்றார்.

காஞ்சிபுரத்தில் தாம் பேசிய கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக கூறிய விஜய், “மக்களுக்கு இலவசமாக கொடுப்பதை ‘ஓசி’ என்று ஏன் விமர்சிக்கிறீர்கள்? மக்களுக்கு பிரச்சனை என்றால் விஜய் வந்து நிற்பான். அண்ணாவும் எம்.ஜி.ஆரும் தமிழ்நாட்டின் சொத்து. அவர்களை பயன்படுத்துவது குறித்து கேள்வி எழுப்பக்கூடாது” என பேசினார்.

மேலும், “பெரியார் பெயரை சொல்லிக் கொண்டு தயவு செய்து கொள்ளையடிக்காதீர்கள். அப்படி செய்பவர்கள்தான் எங்கள் அரசியல் எதிரிகள். அதனால்தான் எதிரி யார் என்பதை தெளிவாக சொல்லி களத்திற்கு வந்துள்ளோம்” என்றும் கடுமையாக விமர்சித்தார்.

பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுகையில், “பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொன்னால், பாதுகாப்பு இருக்கிறது என்கிறார்கள். உண்மையிலேயே பாதுகாப்பு இருக்கிறதா?” என கேள்வி எழுப்ப, அதற்கு தொண்டர்கள் ‘இல்லை’ என பதிலளித்தனர்.

மேலும், “களத்தில் இல்லாதவர்களையும், களத்துடன் சம்பந்தமில்லாதவர்களையும் எதிர்க்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. நீங்கள் கேட்கிறீர்கள் என்பதற்காக அதை செய்ய முடியாது. எங்களுக்கு செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கிறது” என அவர் தெரிவித்தார்.

திமுக ஆட்சியை விமர்சித்த விஜய், “அனைவருக்கும் வீடு வழங்கியதாக கூறுகிறார்கள். ஆனால் எல்லாரும் சொந்த வீட்டில்தானா இருக்கிறீர்கள்?” என மக்களிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு கூட்டத்தில் இருந்தவர்கள் வாடகை வீட்டில் இருப்பதாக பதிலளித்தனர். பள்ளி இடைநிற்றல் பிரச்சனைகள் குறித்தும் அவர் பேசினார்.

விஜய் கட்சி தொடங்கிய பிறகு விக்கிரவாண்டி மாநாடு முதல் இதுவரை அதிமுகவை விமர்சிக்கவில்லை என்ற விமர்சனங்களுக்கும், பாஜக பெயரை குறிப்பிடவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கும், “2026 தேர்தலில் யார் நேரடியாக களத்தில் இருக்கிறார்களோ அவர்களைத்தான் எதிர்ப்போம்” என்ற பதிலடியை அவர் இந்த உரையின் மூலம் கொடுத்துள்ளார்.

Exit mobile version