அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறிய கூட்டணி முறிவுக்கு தானே காரணம் என்ற குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
“டிடிவி தினகரன் 2001 தேர்தல் உட்பட பல தருணங்களில் முக்கிய பங்காற்றியவர். என்னைப்போன்றவர்கள் உயர்ந்த நிலைக்கு வர அவரும் காரணம். எனக்கு அவருடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அமித் ஷாவின் வழிகாட்டுதலின் படிதான் நான் மாநிலத் தலைவராகச் செயல்படுகிறேன். கூட்டணி முறிவுக்கு நான் காரணம் என்று அவர் எந்த அடிப்படையில் கூறுகிறார் என்பது எனக்குத் தெரியவில்லை. கூட்டணியிலிருந்து கட்சிகள் விலகுவதும், தற்போது நடைபெறும் சூழல்களும் எனக்கும் மனவருத்தம்தான்,” என்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக தாம் அறிவிக்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
“மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகுதான் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுடன் கூட்டணியில் இருந்தவர்கள், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் தொடர்வார்கள்,” என்று நாகேந்திரன் உறுதியாகக் கூறினார்.
மேலும், செங்கோட்டையனை பாஜகவில் இணைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும், தாங்கள் ஏற்கனவே கூட்டணியில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
திமுக அரசை கடுமையாக விமர்சித்த அவர், “மக்கள் நலனில் கவனம் செலுத்தாமல், நியாயமற்ற முறையில் செயல்படும் அரசு இது. தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை,” என்று குற்றம் சாட்டினார்.
அதனைத் தொடர்ந்து, “அனைவரும் இணைய வேண்டும் என்பதே என் நிலைப்பாடு. ஒரு சிறிய கட்சி, பெரிய கட்சி என்பது முக்கியமல்ல; கூட்டணிதான் முக்கியம்,” என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
 
			















