அதிமுகவிலிருந்து விலகிய அன்வர் ராஜா திமுகவில் சேர்ந்ததைத் தொடர்ந்து, அதேபோல ஜெயக்குமாரும் திமுக பக்கம் செல்லவுள்ளதாக பேசப்பட்டது. இதனைக் கடுமையாக மறுத்துள்ள ஜெயக்குமார், “பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நின்ற ஆள் நான் அல்ல. உடலில் ஓடுவது அதிமுக ரத்தம்தான். உடல் மண்ணுக்குத் தான்… உயிர் அதிமுகவுக்கே,” எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தயார் பணிகள் தமிழக அரசியல் கட்சிகளில் சுடசுட வெடிக்கத் தொடங்கியுள்ளன. அதிமுக மற்றும் பாஜக இடையேயான கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது. ஆனால், இந்த கூட்டணி கீழ்மட்ட தொண்டர்களிடையே முழுமையாக ஏற்கப்படவில்லை என விமர்சனங்கள் எழுகின்றன. குறிப்பாக, 2021 ராயபுரம் தொகுதியில் பாஜகவுடனான கூட்டணி காரணமாக தான் தோல்வியடைந்ததாக ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் தெரிவித்துவருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், திமுகவுடன் ஜெயக்குமார் இணைவார் என்ற வதந்திகளை எதிர்த்தவர், இன்று செய்தியாளர்களை சந்தித்து, “என்னிடம் எழுப்பப்படும் இந்த வதந்திகள் எல்லாம் தவறானவை. எழுதுவோர் எழுதிக்கொண்டே இருக்கட்டும்… I don’t care!” என்று உருக்கமாகவும் உறுதியாகவும் பதிலளித்தார்.
பின்னர் தொலைபேசி மூலமாகவும் இதே கருத்தை வலியுறுத்திய ஜெயக்குமார், “எனது மனசாட்சி தெளிவாக இருக்கிறது. எம்ஜிஆர் மாளிகைதான் என் வீடு. அறிவாலயம் பக்கம் ஒருபோதும் செல்லமாட்டேன்,” எனத் தெரிவித்தார்.