“எடப்பாடியை விட நான் சீனியர்.. கண்ணீர் விடும் நிலையில இருக்கேன்!” – வேதனையுடன் செங்கோட்டையன் உருக்கம்

ஈரோடு: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தனது நீக்கத்துக்கு கடும் வருத்தம் தெரிவித்துள்ளார். கட்சியில் மூத்த தலைவராக இருந்த தனது நிலையை நினைவூட்டிய அவர், “எடப்பாடியை விட நான் சீனியர். குறைந்தபட்சம் ஒரு நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளதே எனக்கு பெரும் வேதனை. கண்ணீர் சிந்தும் நிலையில உள்ளேன்,” என்று உருக்கமாக கூறியுள்ளார்.

கடந்த அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை நிகழ்வில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோருடன் செங்கோட்டையன் கலந்து கொண்டார். இந்த மூவரும் ஒரே மேடையில் தோன்றியதும், அதிமுக வட்டாரங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

ஓபிஎஸ் மற்றும் தினகரன் அதிமுகவுக்கு எதிராக செயல்படுவதாக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில், செங்கோட்டையன் இவர்களுடன் கலந்து கொண்டது கட்சிக்குள் அதிருப்தி கிளப்பியது. இதையடுத்து சேலத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒழுங்கு விதிகளை மீறியதாக கூறி, செங்கோட்டையனை அதிமுகவிலிருந்து நீக்குவதாக அறிவித்தார்.

ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், “நான் திமுகவின் ‘B-டீம்’ இல்லை. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமிதான் A1. அதில் திமுக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெற அனைவரையும் இணைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் பேசினேன். ஆனால் அதை எடப்பாடி ஏற்கவில்லை,” என்றார்.

அவர் மேலும், “1975-ல் கோவையில் நடந்த அதிமுக முதல் பொதுக்குழுவில் நான் பங்கேற்றவன். எம்.ஜி.ஆரிடமிருந்து பாராட்டுப் பெற்றவன். கட்சி உடைந்துவிடக் கூடாது என்பதற்காக 2 முறை எனக்குக் கிடைத்த வாய்ப்பை விட்டுக் கொடுத்தேன். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக ஆவதற்கான பரிந்துரைக் கடிதத்தை ஒப்புதல் பெற்றதும் நான்தான். கட்சியில் தொடர் தோல்விகளுக்குப் பிறகு அனைவரையும் இணைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதையே சொன்னேன்,” எனவும் அவர் கூறினார்.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதனால் மன வேதனையில் இருப்பதாக தெரிவித்த செங்கோட்டையன், “நான் கட்சிக்காக வாழ்ந்தவன். இன்று கட்சியிலிருந்து நீக்கப்பட்டதுதான் எனக்கு மிகப் பெரிய துயரம்,” என்று கண்ணீருடன் உருக்கமாக கூறியுள்ளார்.

Exit mobile version