கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் கரூர் மாவட்டத்திலேயே 27 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தது அப்பகுதி மக்களின் மனதை பெரிதும் வேதனைப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சம்பவத்துக்குப் பிறகு இரண்டு நாட்கள் கழித்து தவெக இளைஞர் தலைவர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த சம்பவம் தனது வாழ்வின் மிகப்பெரிய துக்கமாக உள்ளதாகவும், அந்த வலியை இன்னும் தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், சிறுவயதிலேயே தாயை இழந்த துயர அனுபவத்தை நினைவுகூர்ந்த அவர், “ஒரு மரணத்தின் வலியைச் சிறுவனாக இருந்தபோது உணர்ந்தவன் நான். அதே வலியை மீண்டும் இப்போது உணர வைத்துள்ளது இந்த உயிரிழப்புகள். உறவுகளை இழந்த குடும்பங்களின் அழுகுரலே என்னை தாங்க முடியாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது” என பதிவு செய்துள்ளார்.
“இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அண்ணனாகவும், தம்பியாகவும், மகனாகவும் இருக்கும் உணர்வோடு, அவர்கள் கனவுகளையும் நம்பிக்கைகளையும் சுமந்து செல்லும் உறவாக என் வாழ்க்கைப் பயணம் இருக்கும். இழப்புகளைச் சந்தித்த என் உறவுகளுக்கு ஒருவனாய் என் எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது பதிவின் இறுதியில், “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும்” எனும் வரிகளைக் குறிப்பிட்டு, தன் வேதனையையும் மன வேதனையையும் வெளிப்படுத்தியுள்ளார்.
