ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கலுஜூவாலபாடு கிராமத்தில், மனைவியை கயிற்றால் கட்டி வைத்து கொடூரமாக தாக்கிய கணவனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிராமத்தை சேர்ந்த குருநாதம் என்பவர், மனைவி மற்றும் நான்கு பிள்ளைகளுடன் வசித்து வந்தவர். ஆனால், அவர் ஹைதராபாத்தில் வேறு ஒரு பெண்ணுடன் பழகி அங்கு தங்கி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் குடும்பத்தை கவனிக்காமல் விட்ட நிலையில், மனைவி அருகிலுள்ள பேக்கரியில் வேலை பார்த்து சிறிய வருமானத்தில் குழந்தைகளை வளர்த்து வந்தார்.
சில நாட்கள் கழித்து கிராமத்துக்குத் திரும்பிய குருநாதம், மனைவி சம்பாதித்த பணத்தை கேட்டு சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது. மனைவி அதை மறுத்ததும், கோபமடைந்த அவர், மனைவியின் கைகளை கட்டி வைத்து, பெல்டால் சினிமா வில்லன் போல் தாக்கியுள்ளார்.
அந்த பெண் வலியால் அலறியபோதும், அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்ற முடியவில்லை. காயமடைந்த மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் அவர் மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனை உறவினர்கள் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். தற்போது அந்த காட்சிகள் பரவி பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளன. சம்பவம் குறித்து அதிர்ச்சியடைந்த போலீசார் குருநாதத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

















