கர்நாடகாவின் கடக் மாவட்டத்தைச் சேர்ந்த விஷால் குமார் கோகவி, தனது மனைவி தஹ்சீன் ஹோசமணியால் திருமணத்திற்குப் பின் மதம் மாற்றம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டி போலீசில் புகார் அளித்துள்ளார்.
விஷால் குமார் மற்றும் தஹ்சீன் ஹோசமணி கடந்த மூன்று ஆண்டுகளாக உறவினில் இருந்த நிலையில், 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் திருமண பதிவு செய்துகொண்டனர். பின்னர், 2025 ஏப்ரல் 25ஆம் தேதி, தஹ்சீன் ஹோசமணியின் வற்புறுத்தலால் முஸ்லிம் சடங்குகளின்படி திருமணம் செய்ய விஷால் சம்மதித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், திருமணச் சடங்கின்போது தன்னை அறியாமல் மதம் மாற்றப்பட்டதாகவும், தனது பெயர் மாற்றம் செய்யப்பட்டதாகவும், இதனை மௌல்வி ஒருவரே நடத்தியதாகவும் விஷால் புகாரில் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், திருமணத்திற்கு முன் தஹ்சீன், இந்து சடங்குகளுடன் திருமணம் செய்ய சம்மதித்திருந்தாலும், பின்னர் அவரது குடும்பத்தினர் அழுத்தம் கொடுத்ததால் அவர் மனம் மாறியதாகவும், விஷால் கூறியுள்ளார். தாங்கள் இஸ்லாத்திற்கு மாறவில்லை என்றால், தம்மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்படும் என மிரட்டப்பட்டதாகவும், தொழுகை செய்யவும் ஜமாத்தில் கலந்துகொள்ளவும் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.